36 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா – 2026 இன் கீழ் நடைபெற்ற பிரதேச செயலகப் பிரிவுகளுக்கிடையிலான போட்டித் தொடரில், நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவு தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இவ்வெற்றியின் மூலம் நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவு, இளைஞர் விளையாட்டுத் துறையில் தனது தொடர்ச்சியான சிறப்பான செயல்திறனை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட நுவரெலியா பிரதேச செயலகத்தின் இளைஞர் சேவை அதிகாரிகள், நுவரெலியா இளைஞர் பிராந்திய சம்மேளனத்தின் அதிகாரிகள், இளைஞர் கழகங்களின் அதிகாரிகள் மற்றும் அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
சிறந்த வீராங்கனையாக கினோஜா குமாரசாமி
நுவரெலியா பிரதேச செயலகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டிகளில் பங்கேற்ற 19 வயதுடைய கினோஜா குமாரசாமி, இம்முறை போட்டிகளில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி சிறந்த வீராங்கனையாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கோர்ட்லோச் – கந்தபொல பகுதியைச் சேர்ந்த கினோஜா குமாரசாமி, நுவரெலியா லைசியம் பாடசாலையின் பழைய மாணவிஆவார்.
இவர் மீற்றர் ஓட்டப் போட்டி, நீளம் பாய்தல் மற்றும் முப்பாய்ச்சல் ஆகிய போட்டிகளில் முதலாம் இடங்களைப் பெற்று, மூன்று போட்டிகளிலும் முதலிடத்தைத் தனதாக்கியுள்ளார்.
இதன் மூலம் நுவரெலியா பிரதேச செயலகத்திற்குப் பெருமை சேர்த்ததுடன், போட்டித் தொடரில் தனது சிறப்பான தனிப்பட்ட திறமையை வெளிப்படுத்தி சிறந்த வீராங்கனையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சிறந்த வீரராக சச்சிந்த வீரசிங்க
நுவரெலியா அண்டர் பேங்க் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சச்சிந்த வீரசிங்க , நுவரெலியா லைசியம் பாடசாலையின் மாணவராவார்.
நுவரெலியா பிரதேச செயலகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டிகளில் பங்கேற்ற இவர், 100 மீற்றர் ஓட்டப் போட்டி, நீளம் பாய்தல் மற்றும் முப்பாய்ச்சல் ஆகிய மூன்று போட்டிகளிலும் முதலாம் இடத்தைப் பெற்று, மூன்று தங்கப் பதக்கங்களைத் தனதாக்கியுள்ளார்.
இச்சிறப்பான சாதனையின் அடிப்படையில், இம்முறை நடைபெற்ற போட்டிகளில் சிறந்த ஆண் வீரராக சச்சிந்த வீரசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கினோஜா குமாரசாமி மற்றும் சச்சிந்த வீரசிங்க ஆகிய இருவரின் சிறப்பான சாதனைகளும், நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவின் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்திற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளன.
இவர்களின் வெற்றிக்கு அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் தொடர்ச்சியான பயிற்சி* முக்கிய காரணிகளாக அமைந்துள்ளன.
கஜரூபன் திவ்யா
நுவரெலியா
