தமிழகத்தின் தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 3-வது தெருவைச் சேர்ந்த விக்னேஷ்வரன் (33) என்பவர் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தி வருகிறார். அதன்படி, கடந்த 13-ம் திகதி விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தினார்.
தொடர்ந்து, கடந்த 15-ம் திகதி விநாயகர் சிலைக்கு 100 ரூபா நோட்டுகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ரூ.10 ஆயிரம் பெறுமதியான பண (இந்திய நாணய மதிப்பு) மாலையை அணிவித்தார். பின்னர் இரவு வரை விநாயகர் சிலை அருகில் இருந்த விக்னேஷ்வரன், அதன் பிறகு வீட்டுக்குச் சென்றார்.
மறுநாள் 16-ம் திகதி அதிகாலையில் விநாயகர் சிலையை பார்த்தபோது, சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த ரூ.10 ஆயிரம் பண மாலை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர், ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்தார். பொலிஸார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதனடிப்படையில், இத்திருட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 3-வது தெருவைச் சேர்ந்த ரூபன் (20), பட்டேல் நகர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (19) ஆகிய இருவரை பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இவர்களுடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டதாக 16 மற்றும் 17 வயதுடைய மேலும் 4 சிறுவர்களையும் கைது செய்தனர். இச்சம்பவம் குறித்துத் தொடர்ந்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.










