வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதியை கைது செய்து, தற்காலிக ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிகஸை (Delcy Rodriguez) அமெரிக்க நிர்வாகம் அதிகாரத்தில் அமர்த்தியதை அடுத்து, இரு தலைவர்களுக்கும் இடையிலான முதலாவது சந்திப்பு அடுத்த வாரம் (23) நடைபெறவுள்ளது.
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக வெனிசுலா ஜனாதிபதி நியூயார்க் செல்கின்றார். இதன்போதே ட்ரம்புடனான சந்திப்பு இடம்பெறவுள்ளது.
மேலும், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கட்டார், ஓமான், குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) தலைவர்களையும் டிரம்ப் சந்திக்கவுள்ளார்.
ஈரானுடனான போர் 6 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், அதற்கு ஒரு முடிவைக் கொண்டுவர அமெரிக்கா திணறி வரும் பின்னணியில் இச்சந்திப்பு நிகழ்கிறது.
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க இராணுவம் மேற்கொண்ட திடீர் நடவடிக்கையில், அன்றைய ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டு, போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்காக அமெரிக்காவிற்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அதன் பின்னரே, மதுரோவின் நிர்வாகத்தில் துணைத் தலைவராக இருந்த ரோட்ரிகஸ் வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.
வெனிசுலாவின் பரந்த கச்சா எண்ணெய் இருப்புக்களில் அமெரிக்காவிற்கு பங்களிப்பை வழங்கும் ஒப்பந்தம் ஒன்று கடந்த மாதம் இரு நாடுகளுக்கும் இடையே அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, டிரம்ப் மற்றும் ரோட்ரிகஸ் இடையிலான இந்த முதல் சந்திப்பு நடைபெறுகிறது.
இதனிடையே, ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, டிரம்பைச் சந்திப்பாரா என்பதை அமெரிக்க மூத்த அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை; ஆனால், அதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இஸ்ரேலியத் தேர்தல் காலம் என்பதால் நெதன்யாகுவின் நியூயார்க் பயணம் மிகக் குறுகிய காலமாகவே இருக்கும் என்றும், டிரம்ப் புறப்பட்ட பிறகே அவர் அங்கு வருவார் என எதிர்பார்ப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.










