வங்காள விரிகுடாவில் அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த சில நாட்களில் மேலும் வலுவடையக் கூடிய சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் இன்று மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். குறித்த பிரதேசங்களின் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக நாட்டிற்குநேரடித் தாக்கம் ஏதும் இருக்காது என்றாலும், காற்று வீசுகை காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடமத்திய மாகாணத்திலும் மன்னார் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
