மலையக மக்களின் வாழ்வாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பல அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருகின்ற போதிலும், அவை தொடர்பில் பெரிதாகப் பேசப்படுவதில்லை. ஆமை நூறு முட்டைகளை இட்டுவிட்டு அமைதியாக இருக்கும், ஆனால் கோழி ஒரு முட்டையை இட்டுவிட்டு கொக்கரிக்கும். இன்று மலையகத்திலும் இதுபோன்ற நிலைமையே காணப்படுகின்றது என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்தார்.
மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டத்தில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் வட்டார சபை ஸ்தாபிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த இரண்டு வருட காலப்பகுதியில் இனவாதம், குலவாதம், மதவாதம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு, அனைத்து மக்களையும் சமமாக ஏற்றுக்கொண்டு, மக்களின் பிரதிநிதிகளையும் தலைவர்களையும் மதிக்கும் அரசாங்கம் உருவாகியுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் கீழ், மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குத் தேவையான நிதி போதியளவில் ஒதுக்கப்பட்டு வருகின்றது. மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அரசாங்கம் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. மலையகப் பகுதிகளிலும் கல்வி, வீடமைப்பு, காணி உரிமை, வாழ்வாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பல அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆனால், இவ்வாறான பணிகளை நாம் விளம்பரப்படுத்திக்கொண்டு திரிவதில்லை. ஆமை நூறு முட்டைகளை இட்டுவிட்டு அமைதியாக இருக்கும், கோழி ஒரு முட்டையை இட்டுவிட்டு கொக்கரித்துக்கொண்டிருக்கும். இன்று மலையகத்திலும் இதுபோன்ற நிலைமையே காணப்படுகின்றது. நாம் மக்களுக்காக பல பணிகளை அமைதியாக முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால், சிலர் சிறிய பணிகளைக்கூட பெரிதுபடுத்தி அதனைப் பற்றி தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர்.
எமது அரசாங்கத்தின் நோக்கம் வெறுமனே விளம்பரங்களை மேற்கொள்வது அல்ல. மக்களின் உண்மையான பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவற்றுக்குத் தீர்வு காண்பதுடன், அவர்களின் வாழ்க்கையில் நிலையான மாற்றத்தை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும்.
அதேவேளை, மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக ஒதுக்கப்படும் அரச நிதியில் மோசடிகள் இடம்பெறுமானால், அதற்கு எதிராக சட்டம் நிச்சயமாகச் செயற்படும். நாம் ஆரம்பத்திலேயே உறுதியளித்ததைப் போன்று, சட்டத்தை சுயாதீனமாகச் செயற்படும் வகையில் நிலைநிறுத்தியுள்ளோம். எனவே, சட்டம் தனது கடமையைச் செய்யும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை.
சட்டத்தின் முன் பெரியவர், சிறியவர் என்ற வேறுபாடு கிடையாது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் ஜனாதிபதியும் நாட்டின் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக உண்மையான அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர். மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்ற நிலையில், ஏதேனும் தவறான செயற்பாடுகள் இடம்பெறுமானால், அதற்கெதிராக சட்டம் கட்டாயம் நடவடிக்கை எடுக்கும்.
சட்டத்திலிருந்து எவராலும் தப்பிக்க முடியாது என்பதை நாம் நடைமுறையிலேயே எடுத்துக்காட்டியுள்ளோம். மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளையும், நாட்டில் சட்டத்தின் ஆட்சியையும் ஒரே நேரத்தில் உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும்” என அவர் மேலும் தெரிவித்தார்.










