உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக, நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 பேருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இன்று (22) தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம், கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயம்; மட்டக்களப்பு சியோன் தேவாலயம்; தி கிங்ஸ்பரி விடுதி; ஷங்ரி-லா விடுதி ; சினமன் கிராண்ட் விடுதி ; மற்றும் தெஹிவளை ட்ரொபிகல் விடுதி உள்ளிட்ட இடங்களில் நடந்த எட்டு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக சட்டமா அதிபர் 25 சந்தேக நபர்களுக்கு எதிராக, குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்திருந்தார்.
இவர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ், சதித்திட்டம், ஆயத்தப்படுத்துதல், உடந்தையாக இருத்தல், வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களைச் சேகரித்தல், கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகள், சுமத்தப்பட்டுள்ளன.
விசாரணையின் போது, 17-வது சந்தேக நபரான யாசின் பாவா அப்துல் ரவுப், மகசின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
மேல் நீதிமன்ற நீதிபதிகள் நவரத்ன மராசிங்க, இராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்ஸங்க ஆகியோரைக் கொண்ட கொழும்பு மேல்நீதிமன்ற விசாரணை அமர்வின் முன்பாக, இந்த வழக்கு விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணை தினமும் நடத்தப்பட்டு, 2,309 அரசுத் தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது.
நீண்ட விசாரணைக்குப் பின்னர், கொழும்பு மேல்நீதிமன்ற விசாரணை அமர்வு, இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
