அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைத்த போதிலும், ஐக்கிய மக்கள் சக்தி தனது முன்னைய நிலைப்பாட்டிலேயே உறுதியாக நிற்கின்றது. அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தமானது ஜனநாயகத்திற்கு விரோதமான ஒரு அரசியலமைப்புத் திருத்தமாகும்.
அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தமானது அரசியல் மரணதண்டனையை நிறைவேற்றுபவரின் அரசியலமைப்புத் திருத்தமாக காணப்படுகின்றது. இத்திருத்தமானது கனம் நீதிமன்ற சுயாதீனத்தின் மீதும், நீதியைப் பெற்றுக் கொடுக்கும் செயன்முறை மற்றும் சட்டத்தின் ஆட்சி மீதும் பெரும் மரண அடியை கொடுப்பதாக அமைந்து காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (22) உரையாற்றும் வேளையிலயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
சுருக்கமாகக் கூறுவதானால், இந்தத் திருத்தமானது ஒரு அரசியல் அலுகோசு திருத்தமாகும். ஜனநாயகத்தை அழிப்பதற்காக உருவாக்கப்பட்ட அரசியலமைப்புத் திருத்தமாகும். இதனை ஒரு அரசியல் சூழ்ச்சி என்றும், அரசியலமைப்பு ரீதியான சூழ்ச்சி என்றும் அழைக்கலாம்.
எனவே, 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நான் நிராகரிக்கின்றேன். “வளமான நாடு, அழகான வாழ்க்கை” என்ற கொள்கைப் பிரகடனத்தில் ஜனாதிபதி பதவியை ஒழிப்பதாக பிரஸ்தாபிக்கப்பட்ட போதிலும், தற்போதைய அரசாங்கம் கனம் நீதிமன்றத்திற்கு பெரும் மரண அடியை ஏற்படுத்தும் வேலைகளையே செய்து வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகளைக் கண்டறிய பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான விசாரணை அவசியம்
இன்று உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்தும் பேசப்படுகின்றன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி எப்போதுமே சரியான மற்றும் வெளிப்படையான நிலைப்பாட்டையே கொண்டுள்ளது.
எதிர்காலத்திலும் அது மாறாது. இந்த கொடூரமான தாக்குதலின் பின்னணியில் உள்ள பிரதான சூத்திரதாரிகள் யார் என்பதை வெளிக்கொணர வேண்டும். உண்மையை வெளிக்கொணர்வதற்காக பக்கச்சார்பற்ற, வெளிப்படையான மற்றும் சர்வதேச நிபுணர்களை உள்ளடக்கிய விசாரணை நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
