ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் (Qantas) நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று வான்வெளியில் பறந்துகொண்டிருந்த போது, பயணிகள் மற்றும் ஊழியர்களைத் தரக்குறைவாகப் பேசியதுடன் விமானத்தின் கதவைத் திறக்கவும் முயன்ற 41 வயது நிரம்பிய மேற்கு ஆஸ்திரேலிய நபர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை கரத்தா (Karratha) நகரில் இருந்து பெர்த் (Perth) நோக்கிச் சென்ற விமானத்திலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
குறித்த நபர் பயணி ஒருவரைத் தரக்குறைவாகப் பேசியதுடன், தனக்கு முன்னால் இருந்த ஆசனத்தை உதைத்தும் தள்ளியும் இடையூறு விளைவித்ததாகக் காவல் துறை குற்றம் சாட்டியுள்ளது.
விமானப் பணிப்பெண்கள் இச்சம்பவத்தில் தலையிட்டு அவரைத் தடுக்க முயன்ற போது, அவர்களையும் அவர் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து, விமானம் தரையிறங்குவதற்காகச் சீட் பெல்ட்டை அணியுமாறு பணிப்பெண்கள் கொடுத்த உத்தரவை அவர் புறக்கணித்ததுடன், விமானம் வான்வெளியில் பறந்துகொண்டிருந்த போதே அதன் பயணிகள் கதவைத் திறக்கவும் முயற்சித்துள்ளார்.
விமானம் பெர்த் நகரை அடைந்ததும், ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல் துறை (AFP) அதிகாரிகளால் அவர் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். அப்போது காவல் அதிகாரிகளிடமும் அவர் வன்முறையாக நடந்துகொண்டதை அடுத்து, அதிகாரிகள் அவரைக் கட்டுப்படுத்த வேண்டியதாயிற்று.
காமன்வெல்த் அதிகாரி ஒருவருக்குத் தீங்கு விளைவித்தது, விமானத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியது, விமான ஊழியர்களின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியாதது மற்றும் ஒழுங்கீனமாக நடந்துகொண்டது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று பெர்த் மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்த நபருக்குப் பிணை வழங்கப்பட்டதுடன், அவர் மீண்டும் நவம்பர் 27 அன்று நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
