காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த கொள்ளுப்பிட்டி உணவகத்திற்கு ரூ.100,000 அபராதம்!

காலாவதியான இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை பொதுமக்களின் நுகர்வுக்காக விற்பனைக்கு வைத்திருந்தமை தொடர்பில், கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள உணவகமொன்றுக்கு ரூ.100,000 அபராதம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகள் 2026 செப்டெம்பர் 10 ஆம் திகதி, கொள்ளுப்பிட்டி, வாலுகாராம வீதியில் அமைந்துள்ள Li Jing Restaurant (Pvt) Ltd நிறுவனத்தைப் பரிசோதித்தபோது, காலாவதியான இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.

குறித்த YUCHUXIANG (270g) உணவுப் பொதிகளில் உற்பத்தித் திகதி 2024/05/18 என குறிப்பிடப்பட்டிருந்ததுடன், உற்பத்தித் திகதியிலிருந்து செல்லுபடியாகும் காலம் 18 மாதங்கள் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்படி காலாவதியாகியிருந்த குறித்த உணவுப் பொருட்கள் பொதுமக்களின் நுகர்வுக்காக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தமை விசாரணையில் தெரியவந்தது.

குறித்த பொருட்கள் வழக்குப் பொருட்களாக விசாரணை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.

இது தொடர்பில் பணிப்புரை இலக்கம் 52 ஐ மீறியமைக்காக, நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் (இலக்கம் 05) முன்னிலையில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

2026 செப்டெம்பர் 23 ஆம் திகதி வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட பிரதிவாதி நிறுவனத்திற்கு ரூ.100,000 அபராதம் விதிக்கப்பட்டது.

🔎 நுகர்வோரே — கொள்வனவு செய்வதற்கு முன்னர் திகதிகளைச் சரிபாருங்கள்.

உணவகங்கள், சுப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் ஏனைய வர்த்தக நிலையங்களிலிருந்து பொதியிடப்பட்ட உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும்போது உற்பத்தித் திகதி, பயன்படுத்த ஏற்ற காலப்பகுதி மற்றும் காலாவதியாகும் திகதி (EXP) ஆகியவற்றை கவனமாகச் சரிபார்க்கவும்.

🏪 வர்த்தகர்கள் மற்றும் உணவக உரிமையாளர்களும் தங்களது கையிருப்பில் உள்ள பொருட்களின் காலாவதியாகும் திகதிகளை தொடர்ச்சியாகச் சரிபார்த்து, காலாவதியான பொருட்களை உடனடியாக விற்பனைக்குரிய கையிருப்பிலிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

📞 காலாவதியான அல்லது விற்பனைக்குப் பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் தொடர்பான தகவல்கள் இருப்பின், அலுவலக நேரங்களில் 1977 குறுந்தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு அறிவிக்கவும்.

பதிவு – நுகர்வோர் அதிகார சபை முகநூல் பக்கம்

Related Articles

Latest Articles