யாழ்ப்பாணம், அரியாலை – பூங்கன்குளம் ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று பிற்பகல் ரயில் மோதிய விபத்தில் தந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அத்துடன் மகள் படுகாயமடைந்துள்ளார்.
பாடசாலையில் இருந்து தனது மகளை மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு அழைத்துச் சென்ற தந்தையே இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த பாடசாலை மாணவியான மகள், உடனடியாக மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் யாழ். மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் பணியாளரான நாகராசா சூரியகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேற்படி நபர் மோட்டார் சைக்கிளில் ரயில் கடவைக் கடக்க முற்பட்டபோதே இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்து நடந்த ரயில் கடவையில் நீண்ட காலமாக ஊழியர்கள் கடமையில் இல்லை எனவும், எச்சரிக்கைக்கான ஒலி சமிக்ஞை உரிய முறையில் இயங்குவதில்லை எனவும் அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பாதுகாப்பற்ற முறையில் காணப்படும் இந்தக் கடவையில் அடிக்கடி விபத்துக்கள் இடம்பெறுகின்றன எனவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பில் இனியாவது உடனடியாகக் கவனம் செலுத்தித் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விபத்து தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
