சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் விவகாரம் தொடர்பில் அரசாங்கம் முழுமையான அவதானம் செலுத்தியுள்ளதாகவும், ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத் தொடரின் போது சவூதி வெளிவிவகார அமைச்சரை நேரில் சந்தித்து இது குறித்துப் பேசவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று விசேட கூற்றையொன்றை முன்வைத்து உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்:
“சிவராசா அனோஜன் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் முறைப்படி பதிவுசெய்து வெளிநாடு சென்ற தொழிலாளியாவார்.
எனவே, அவருக்காக சவூதி அரேபியாவில் இதுவரை செலவிடப்பட்ட மற்றும் இனிவரும் காலங்களில் செலவிடப்படவுள்ள அனைத்துச் சட்டச் செலவுகளையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும். இச்சட்டப் போராட்டத்திற்காக அவருடைய பெற்றோரால் இதுவரை செலவழிக்கப்பட்ட தொகையும் அவர்களிடம் மீள ஒப்படைக்கப்படும்.
சவூதி சட்டத்திற்குட்பட்டு அனோஜனுக்கு எந்த வகையில் நிவாரணம் அல்லது தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்பது குறித்து அனைத்து இராஜதந்திர வழிமுறைகள் மூலமும் அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது.
நியூயார்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்கும் சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சரை நான் நேரில் சந்திக்கவுள்ளேன். இச்சந்திப்பின் போது அனோஜனின் விவகாரம் குறித்து விரிவாகக் கலந்துரையாட எதிர்பார்க்கின்றேன்.
மரண தண்டனையை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்ற கோரிக்கை, பொதுமன்னிப்பு அளிப்பதற்கான வேண்டுகோள், தண்டனையைக் குறைத்தல் மற்றும் சவூதி சட்ட அமைப்பின்கீழ் பெறக்கூடிய ஏனைய நிவாரண வழிமுறைகள் என அனைத்து சாத்தியக்கூறுகள் குறித்தும் தீவிரக் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
எனவே, இந்த விவகாரத்தில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் இராஜதந்திர மட்டத்திலான முயற்சிகளுக்கு இடையூறோ அல்லது பாதிப்போ ஏற்படும் வகையில் எவரும் செயற்பட வேண்டாம் எனவும், தேவையற்ற கருத்துக்களை வெளியிட வேண்டாம் எனவும் அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்,” என அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டினார்.
