1000 ரூபாவை வழங்க அமைச்சரவை நேற்று அனுமதி – அரச ஊடகம் தகவல்

தோட்டத்தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை சம்பள நிர்ணய சபையினூடாகவேணும் 1000 ரூபாவாக அதிகரிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் நேற்று (25) கூடிய அமைச்சரவை முடிவுசெய்துள்ளது என ‘தினகரன்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா முன்வைத்த அமைச்சரவை பத்திரம்தொடர்பாக கலந்துரையாடிய பின்னர் அமைச்சரவை இம்முடிவுக்கு வந்துள்ளது.

தற்போதைய அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி என்பதால் அதனை உடனடியாக நிறைவேற்றவேண்டுமென அமைச்சர்கள் சுட்டிக்காட்டிய நிலையில் அதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்துள்ளார்.

பெருந்தோட்டத்துறையின் கூட்டு ஒப்பந்தத்திற்கு அமைய குறைந்தபட்ச சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதில் பிரச்சினை காணப்பட்டதோடு, தொழில்தருநர் விரும்பாவிடில் சம்பள நிர்ணய சபையினூடாக அம்முடிவை செயற்படுத்த முடியுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் நிதி அமைச்சின் முடிவினை பெற்றுக் கொடுப்பதற்கு ஒரு வார கால அவகாசம் கேட்டுள்ளதாக அறிந்த ஜனாதிபதி இந்த அமைச்சரவைகூட்டத்திலேயே அதனை அனுமதிக்கவேண்டுமென கூறியுள்ளார்.

அதன் பிரகாரம் சம்பள நிர்ணய சபையினூடாகவேணும் தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த குறைந்தபட்ச வேதனத்தை 1000 ரூபாவாக அதிகரிக்கும் முடிவுக்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles