ஜனநாயகத்தை இல்லாதொழிப்பதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு நாட்டு மக்கள் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்கவில்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்து.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம். மரிக்கார் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
“அரசாங்கம் ஜனநாயகத்தை இல்லாதொழித்து, சர்வாதிகார பாதையை நோக்கிப் பயணித்தால் அதற்கு எதிராக மக்களை அணிதிரட்டி எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்குரிய உரிமையும் பொறுப்பும் பிரதான எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்திக்கு உள்ளது.
5 ஆண்டுகளுக்கே இந்த அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். தேசிய மக்கள் சக்தியை, ஐக்கிய மக்கள் சக்தியால் மட்டுமே தோற்கடிக்க முடியும்.
அதேவேளை, இந்நாட்டில் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த, கொலைக் கலாசாரத்தை அறிமுகப்படுத்திய, ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்திய மற்றும் நாட்டை வங்குரோத்து அடையச் செய்த நபர்களுடன் ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் இணையாது.
எமது துணிச்சலான மற்றும் தூய்மையான அரசியல் பயணத்தின் வெளிப்பாடாகவே வரும் 24 ஆம் திகதி எம்மால் முன்னெடுக்கப்படும் போராட்டம் அமையும்,” என்று தெரிவித்தார் எஸ்.எம். மரிக்கார்.
