‘எல் நினோ’ அச்சுறுத்தல்: உலகளவில் பெருமளவிலான உயிரிழப்புகள் ஏற்படக் கூடும் என அச்சம்

இந்த ஆண்டில் தீவிரமடைந்துள்ள ‘எல் நினோ’ (El Niño) வானிலை மாற்றம் காரணமாக உலகளாவிய வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும் என்றும், இதன் விளைவாக அடுத்த ஆண்டு பெப்ரவரிவரை உலகம் முழுவதும் பெருமளவிலான உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

பூமியின் நிலப்பரப்பு வெப்பநிலை சுமார் 1.2 டிகிரி செல்சியஸ் (2.1 டிகிரி பாரன்ஹீட்) வரை அதிகரிக்கக்கூடும் என்றும், சாதாரண ஆண்டுகளை விட தீவிர வெப்பம் நிலவும் நாட்களின் எண்ணிக்கை 44 சதவீதம் அதிகரிக்கும் என்றும் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

இவ்வெப்ப அலையின் தாக்கம் வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவின் ‘சாஹேல்’ (Sahel) பிராந்தியத்தைப் பாரிய அளவில் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, சாஹேல் பிராந்தியம் முழுவதும் சுமார் 66,800 மேலதிக உயிரிழப்புகள் பதிவாகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. தனி நபர் உயிரிழப்புகளில் நைஜீரியா 31,400 உயிரிழப்புகளுடன் முதலிடத்தில் உள்ளதுடன், அதனைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் 19,300 உயிரிழப்புகளும், சூடானில் 17,600 உயிரிழப்புகளும் ஏற்படக்கூடும் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர, பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளில் கூட்டாக 19,400 உயிரிழப்புகளும், இந்தியாவில் 15,800 உயிரிழப்புகளும், பிரேசிலில் 13,300 உயிரிழப்புகளும் பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே வெப்பநிலை அதிகமாகவும், வருமானம் ஒப்பீட்டளவில் குறைவாகவும் உள்ள பகுதிகளுக்கே வெப்பத்தினால் அதிக ஆபத்து ஏற்படுவதை இந்த ஆய்வு முடிவுகள் காட்டுவதாக, இவ்வாய்வின் இணை ஆசிரியரான மைக்கேல் கிரீன்ஸ்டோன் (Michael Greenstone) தெரிவித்துள்ளார்.

“ஏற்கனவே வெப்பமான நிலையில் உள்ள ஒரு பகுதியில், மேலும் சில டிகிரி வெப்பநிலை உயர்வது மிகவும் ஆபத்தானதாக அமையும்” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வளர்ச்சியடைந்த வசதியான நாடுகளில் குளிரூட்டும் வசதிகள் (Air conditioning), சீரான குடிநீர் விநியோகம் மற்றும் சிறப்பான சுகாதாரச் சேவைகள் எளிதில் கிடைப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், இந்த எல் நினோவின் ஆபத்து அதன் கால அளவையும் தாண்டி அடுத்த கோடைகாலம் வரை நீடிக்கக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் NRDC அமைப்பின் வெப்ப அலை தொடர்பான நிபுணரான அபியந்த் திவாரி (Abhiyant Tiwari), இக்கணிப்புகள் உடனடி நடவடிக்கைகளைத் தூண்ட வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இந்தியாவில் காகிதளவில் சிறந்த திட்டங்கள் இருந்தபோதிலும், அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் கள அளவிலான செயல்பாடுகள் பலவீனமாகவே உள்ளதாகத் தெரிவித்த அவர், “நமது தயார்நிலையின் உண்மை அளவுகோல், நாம் எத்தனை வெப்ப எச்சரிக்கைகளை வெளியிடுகிறோம் என்பதில் இல்லை; மக்களை எவ்வளவு திறம்படப் பாதுகாத்து, தவிர்க்கக்கூடிய உயிரிழப்புகளைக் குறைக்கிறோம் என்பதிலேயே உள்ளது” எனக் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டின் எல் நினோ ஜூன் மாதம் உருவாகத் தொடங்கியதுடன், இது வரலாற்றிலேயே மிகவும் சக்திவாய்ந்த அமைப்புகளில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுழற்சி முறையில் ஏற்படும் இந்த இயற்கை வானிலை மாற்றமானது, பருவநிலை மாற்றத்தின் காரணமாக மேலும் வீரியமடைந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

செப்டம்பர் தொடக்கத்தில், ஐக்கிய நாடுகளின் வானிலை முகவரகம், இந்த எல் நினோ நிகழ்வு வரும் 2027 பிப்ரவரி வரை தொடர்வதற்கான சாத்தியக்கூறு 100 சதவீதம் உள்ளதாக அறிவித்திருந்தது. எனினும், இதன் அபாயகரமான தாக்கங்கள் 2027 ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை நீடிக்கக்கூடும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Related Articles

Latest Articles