அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான ஏழு மாதகாலப் போருக்குப் பின்னரும் ஈரான் ஒருபோதும் மண்டியிடாது என்று அந்நாட்டின் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் சூளுரைத்துள்ளார்.
எனினும் இந்த மோதலுக்கு இராஜதந்திர தீர்வைக் காணத் தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.
விரைவில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரானை “அழித்து ஒழிப்பேன்” என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு பதிலளித்த பெசெஷ்கியான், ஐ.நா பொதுச் சபையில் உரையாற்றுகையில்:
“பொருளாதாரத் தடைகள், தீவிரமடையும் அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஈரானிய மக்களின் எதிர்ப்பு வீரியம் மட்டுமே அடையும்” என்று குறிப்பிட்டார்.
அத்துடன், முக்கிய வளைகுடா கடல் வழியை ஈரானியக் கப்பல்கள் பயன்படுத்துவதைத் தடுக்கும் அமெரிக்காவின் முற்றுகை முடிவுக்குக் கொண்டுவரப்படுவது எந்தவொரு உடன்படிக்கையிலும் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“ஹோர்முஸ் நீரிணையின் நன்மைகளை அனைவரும் அனுபவிக்கும் வேளையில், எங்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றும் அவர் கூறினார்.
பெசெஷ்கியான் தனது உரையைத் தொடங்கியபோது அமெரிக்கக் குழுவினர் மண்டபத்தை விட்டு வெளியேறினர்.
இது குறித்து அமெரிக்கத் தரப்பிலிருந்து உடனடி கருத்துக்கள் எதுவும் வெளியாகவில்லை.
நியூயோர்க்கில் உள்ள ஐ.நா சபை கூட்டத்தில் உரையாற்றிய ஈரான் ஜனாதிபதி, “அமெரிக்க ஜனாதிபதி எங்களை பயங்கரவாதிகள் எனச் சித்தரிக்கிறார், ஆனால் உண்மையில் நாங்களே பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்” எனத் தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து மேற்கொண்ட தாக்குதலில், தனது இல்லத்தில் வைத்து கொல்லப்பட்ட நாட்டின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனியின் புகைப்படத்தை அவர் இதன்போது உயர்த்திக் காட்டினார்.
அத்துடன், மீனாப்பில் உள்ள ஆரம்பப் பள்ளி மற்றும் லேமர்ட்டில் உள்ள விளையாட்டு வளாகம் ஆகியவற்றின் மீது அன்று நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட 175 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் (இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் குழந்தைகள்) சிலரின் புகைப்படங்களையும் அவர் சமர்ப்பித்தார்.
லேமர்ட் மீதான தாக்குதலை அமெரிக்கா மறுத்துள்ளதுடன், மீனாப்பில் என்ன நடந்தது என்பது குறித்து இன்னும் விசாரணை நடத்தி வருவதாகக் கூறியுள்ளது.”எங்கள் அப்பாவி மக்கள் மீது கொடூரமான தாக்குதல்களும் ஆக்கிரமிப்புகளும் திணிக்கப்பட்டுள்ளன. நாங்கள் எங்களது முழு பலத்துடன் எங்களைத் தற்காத்துக் கொண்டோம்” என்று பெசெஷ்கியான் கூறினார்.










