22 ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றம்

அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று (25) மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

குறித்த சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு பி.ப 7.13ற்கு ஆரம்பானது. வாக்கெடுப்பில் இதற்கு ஆதரவாக 158 வாக்குகளும், எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கு அமைய அரசியலமைப்பின் இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குழுநிலையில் குறித்த சட்டமூலத்தின் இரண்டாவது உறுப்புரைக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் இதற்கு ஆதரவாக 158 வாக்குகளும், எதிராக 63 வாக்குகளும் பதிவாகின. இதற்கு அமைய அரசியலமைப்பின் இருபத்திரெண்டாவது திருத்தத்ச் சட்டமூலத்தின் இரண்டாவது உறுப்புரையும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இதன் பின்னர், சட்டமூலம் மீதான மூன்றாவது மதிப்பீடுக்கான வாக்கெடுப்பில் இதற்கு ஆதரவாக 158 வாக்குகளும், எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டு, மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் மூன்றாவது மதிப்பீடு நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை, நீதித்துறை (திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு பி.ப 7.53 மணிக்கு இடம்பெற்றது. குறித்த வாக்கெடுப்பில் இதற்கு ஆதரவாக 158 வாக்குகளும், எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, சட்டமூலம் மீதான மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 158 வாக்குகளும், எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கு அமைய நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் மூன்றாவது மதிப்பீடு 96 மேலதிக வாக்குகளால் திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டது.

அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தம்) சட்டமூலம் ஆகிய இரண்டு சட்டமூலங்களையும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் முதலாவது மதிப்பீடுக்காக ஓகஸ்ட் 18ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

இச்சட்டமூலங்கள் தொடர்பான இரண்டாவது மதிப்பீடு விவாதம் நேற்றையதினமும் (24) இன்றையதினமும் (25) பாராளுமன்றத்தில் இடம்பெற்றன.

Related Articles

Latest Articles