தேசிய மக்கள் சக்தி என்பது குடும்ப ஆட்சியோ அல்லது ஊடகங்களால் உருவாக்கப்பட்ட ஆட்சியோ அல்ல; இது மக்களால் உருவாக்கப்பட்ட ஆட்சி என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
கம்பஹாவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மக்கள் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:
“தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. இக்காலப்பகுதியில் எமது அரசாங்கம் எவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது, எந்தத் திசையில் பயணிக்கின்றது என்பது குறித்துத் தெளிவுபடுத்துவதற்காகவே மக்களைச் சந்தித்து வருகின்றோம்.
அரசாங்கத்தின் இருப்பு என்பது மக்களின் கைகளிலேயே உள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது. இதற்கு முன்னர் இருந்த ஜனாதிபதிகளிடமும் இந்த அதிகாரம் இருந்தது.
அத்துடன் எமக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது. இதற்கு முன்னரும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைக் கொண்டிருந்த அரசாங்கங்கள் இருந்தன. குறிப்பாக 2019 ஆம் ஆண்டில் 69 லட்சம் வாக்குகள் கிடைத்தன. நிறைவேற்று அதிகாரம், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் என்பன கிடைத்தும் அந்த அரசாங்கங்கள் மக்களால் விரட்டப்பட்டன.
எனவே, அதிகாரம் என்பது நிறைவேற்று ஜனாதிபதி, நாடாளுமன்றம் அல்லது பிரதேச சபைகளின் கைகளில் இல்லை; அது மக்களின் கைகளிலேயே உள்ளது. இந்த அரசாங்கம் மக்களின் அதிகாரத்தை நம்பும் ஒரு அரசாங்கமாகும். அந்த அதிகாரம் இருக்கும் வரை இந்த அரசாங்கத்தை அசைக்க முடியாது. இது மக்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கமாகும்” என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
