உன்னத தலைமைத்துவ பண்புகளோடு பல தலைமுறைகளை செதுக்கிய மாபெரும் ஆளுமை அதிபர் மாயழகு சந்திராதேவி அவர்கள். 1966 செப்டம்பர் 27இல் கண்டி – ரங்கல பிரதேசத்தில் பிறந்து தனது ஆரம்பக் கல்வியை (தரம் 1 – 2) ரங்கல பாடசாலையிலும், தரம் 3 முதல் 13 வரையும் மாத்தளை பாக்கியம் தேசியக் கல்லூரியிலும் கற்றவர்.
கலைப்பிரிவில் 1989இல் தனது உயர்தரத்தை நிறைவு செய்தார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரிப் பட்டப்படிப்பைத் தொடர்ந்து, அதே பல்கலைக்கழகத்தில் 2004 ஆம் ஆண்டு முதுமானிப் பட்டத்தையும் நிறைவு செய்தார்.
தற்போது தனது PHD பட்டப்படிப்பைத் தொடர்ந்து கற்று வருகின்ற இவர், இடைவிடாத தேடலும் கற்றல் ஆர்வமும் கொண்ட ஒரு கல்வியாளராவார்.
1990இல் மாத்தளை, பிட்டகந்த 2 தமிழ் வித்தியாலயத்தில் தனது ஆசிரியர் சேவையைத் தொடங்கிய இவர், தேசிய கல்வி நிறுவகத்தின் ஆரம்பக்கல்வி பயிற்சியினை 1995இல் பெற்றதோடு பட்டப்பின் மேற்கல்வி டிப்ளோமா நெறியினை 1998இல் நிறைவு செய்தார்.
1995 முதல் 2000 வரை மாத்தளை, இரத்தோட்டை இந்து மகா வித்தியாலயத்தில் உயர்தர தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியராகப் பணியாற்றிய இவர் கற்பித்த தமிழ் பாடத்தில் 2006 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் 100 வீத சித்தி எய்தியமைக்காக, மாத்தளை வலயக் கல்வி பணிமனையின் தமிழ் மொழிக்கான ஆசிரியர் ஆலோசகராகத் தேர்வாகி 2000 முதல் 2012 வரை பணியாற்றிச் சிறப்பித்தார்.
அதிபர் போட்டிப் பரீட்சையில் தேர்வாகி மாத்தளை, இரத்தோட்டை இந்து மகா வித்தியாலயத்தில் 2012 – 2014 வரை பிரதி அதிபராகவும் அதே பாடசாலையில் அதிபராக 2014 முதல் 2024 வரை ஆளுமையுடன் சேவை புரிந்தவர்.
அக்காலகட்டத்தில், 2018இல் பெருந்தோட்டப் பாடசாலை ஒன்றில் தொழில்நுட்பப் பிரிவினை முதன்முதலில் தொடங்கி, மாகாண மட்டத்தில் சாதனைகளைப் படைத்தார். இவரின் சிறந்த தலைமைத்துவத்தையும் மாகாண மட்டப் பெறுபேறுகளையும் பாராட்டி, தாய்லாந்தின் பேங்கொக் நகருக்கு ஏழு நாட்கள் தலைமைத்துவப் பயிற்சி விஜயத்தினையும் மேற்கொண்டவர்.
2024 – 2025 வரையிலான கால பகுதியில் மாத்தளை கோட்டக் கல்விப் பணிமனையில் (அலுவிஹாரை) கடமையாற்றினார். 2025இல் இருந்து தற்பொழுது வரை மாத்தளை, பண்டாரப்பொல தமிழ் வித்தியாலயத்தில் அதிபராகப் பணியாற்றியவர்.
சிறுவயது முதலே இலக்கிய ஆர்வம் கொண்ட இவர், எட்டாம் வகுப்பு படிக்கும் போதே மாத்தளை விகாரவீதி தேவி என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதத் தொடங்கினார். வானொலியில் குன்றின் குரல், இன்றைய நேயர்களுக்கு போன்ற நிகழ்ச்சிகளுக்காக இவரின் கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன.
2008 ஆம் ஆண்டு ‘குவி முகை’ என்ற கவிதைத் தொகுப்பையும், அதனைத் தொடர்ந்து 2019இல் ‘புனையா ஓவியம்’ என்ற நூலையும் வெளியிட்டுள்ளார்.
அத்தோடு தனது சுயசரிதத்தை தன் வாழ்வில் இடம்பெற்ற நேர்மறையான நிகழ்வுகள் மட்டும் அடங்கியதான நூலினையும் எழுதிக்-கொண்டிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2005இல் வீரகேசரியில் வெளியான ‘நாவல் இலக்கியத்தில் அரசியல் தாக்கம்’ இவரின் முதல் கட்டுரையாகும். பேராதனைப் பல்கலைக்கழக தமிழ் ஆய்வுத் துறையில் ‘இலங்கையின் ஆரம்பகால நாவல்கள்’ பற்றிய ஆய்வை மேற்கொண்டவர். அகில இலங்கை சைவ புலவர் சங்கத்தின் சைவ நாதம் – 5 சஞ்சிகையிலும் இவரின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
இவர் மாத்தளை பண்டாரப்பொல தமிழ் வித்தியாலயத்தில் (26.09.2026) அன்று 36 வருட சேவையிலிருந்து பணி நிறைவு செய்கிறார். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மிக குறுகிய காலத்தில் இவர் ஆற்றிய பணிகள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை, ஆசிரியர் வாண்மை நிலையத்தில் 5 ஆண்டுகள் விரிவுரையாளராகச் பணியாற்றிய இவர், 2025 முதல் திறந்த பல்கலைக்கழகத்தின் ஆரம்பக் கல்விமானி (டீ.நுன) பகுதிநேர விரிவுரையாளராக கடமையாற்றிக்கொண்டிருக்கின்றார்.
இவரது சேவையைப் பாராட்டிப் 2009இல் வரை தமிழ் சாஹித்திய விழாவில் இலக்கியத் துறைக்கான விருதினையும் பாடசாலையில் குறைந்த விடுமுறைக்காக குரு அபிமானி பதக்கத்தை தொடர்ந்தும் பெற்றவர்.
2017 மத்திய மாகாணக் கல்வித் திணைக்களத்தின் வித்யாசெம்மல் கௌரவிப்பினையும் பெற்றுக்கொண்டவர். இவரது குடும்பமும் கல்விச் செறிவும் அறிவியல் பின்புலமும் கொண்டது. இவரின் புதல்வர் தமிழ்வாணன் மின்பொருள் பொறியியலாளராகவும் புதல்வி பிரயோக இரசாயனவியலில் ஆய்வுகள் மேற்கொள்ளும் விஞ்ஞானியாகவும் திகழ்கின்றனர்.
36 ஆண்டுகள் கல்வித் துறையிலும் சமூகத்திலும் அஞ்சாத நேர்மையோடும், நீதியோடும் பணியாற்றிய திருமதி மாயழகு சந்திராதேவி அவர்கள், நேர்மறை எண்ணங்களை மட்டுமே தன் வாழ்வின் தாரக மந்திரமாகக் கொண்டு, மாத்தளை மண்ணில் எண்ணற்ற மாணாக்கர்களைச் சான்றோர்களாக உருவாக்கிய இவரின் சேவை என்றும் போற்றத்தக்கது.
பெண்மையின் அடையாளமும் தன்னம்பிக்கையின் சின்னமும் சுயமரியாதையும் தனித்துவத்தையும் சொல்லாலும் செயலாலும் நிரூபித்துக்காட்டியவர். எதுவித அச்சமும் இன்றி தனது எண்ணங்களையும் நியாயமான கோரிக்கைகளையும் உரக்க பேசும் இவரின் துணிச்சல் அனைவருக்கும் மாபெரும் தன்னம்பிக்கையை ஊட்டவல்லது.
ஒரு சிறந்த அதிபராக மாணாக்கரின் வாழ்க்கை பாதையை செப்பனிட்ட அதிபரின் ஓய்வுகாலம் ஆரோக்கியமும் அமைதியும் அளவற்ற மகிழ்ச்சி நிறைந்ததாக அமைய மாத்தளை இலக்கிய வட்டத்தின் சார்பாக உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.
மாத்தளை கபில்தேவ் கோகிலா
