“யக்கல நாமல்” என்ற போதைப்பொருள் கடத்தல்காரரிடமிருந்து ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களைப் பெற்று வந்து, நாவலப்பிட்டி, கினிகத்தேனை, கம்பளை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு விநியோகம் செய்து வந்த பிரதான சந்தேகநபரும் அவரது உதவியாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாவலப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எம். குலதுங்கவிற்கு கிடைத்த இரகசிய புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், நாவலப்பிட்டி ஜயசுந்தர வீதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் அமைந்துள்ள சந்தேகநநபரின் வீட்டைச் சோதனையிட்டபோது, விற்பனை செய்து எஞ்சியிருந்த 2450 மில்லிகிராம் ஹெராயின் போதைப்பொருளுடன் 38 வயதுடைய பிரதான சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் Location முறை மூலம் போதைப்பொருட்களை விநியோகிக்க அவருக்கு உதவிய 27 வயதுடைய இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கடை ஒன்றில் உதவியாளராகப் பணிபுரிந்து வந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
நாவலப்பிட்டிப் பகுதிக்கு போதைப்பொருள் விநியோகம் செய்து வந்த கடத்தல்காரர் ஒருவரை நான்கு மாதங்களுக்கு முன்னர் நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்ததைத் தொடர்ந்து, தான் ‘பிக்மீ’ ஆட்டோ ஓட்டுநராகப் போலி வேடமிட்டு இக்கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக விசாரணையின் போது சந்தேகநபர் ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், மூன்று நாட்களுக்கு ஒருமுறை கொழும்புப் பகுதியிலிருந்து போதைப்பொருட்களை எடுத்து வந்து, Location
முறை மூலம் போதைப்பொருள் விநியோகிப்பாளர்களிடம் ஒப்படைத்து வந்ததாகவும், ஒரு பயணத்திற்கு வாடகை பணத்துக்கு மேலதிகமாக 15,000 முதல் 20,000 ரூபா வரை தனக்குக் கட்டணமாக வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.










