“ஜனநாயகத்திற்கு விரோதமான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்புவதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுதியாக உள்ளது” என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
“ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் சுயாதீனத்தை இல்லாதொழிக்கும் அரசாங்கமே இன்று நாட்டை ஆட்சி செய்கின்றது. எவ்வித அபிவிருத்தித் திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை. சட்டத்தைத் தன் கைகளுக்குள் எடுத்தால் மட்டுமே ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என ஆளுங்கட்சி நினைத்துக்கொண்டிருக்கிறது.
எமது கட்சியின் பயணம் தொடர்பில் எமக்குத் தெளிவான கொள்கை உள்ளது. எனவே, இலக்கை நோக்கிய எமது பயணம் தொடரும். மக்களை ஏமாற்றும் இந்த அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்புவதே எமது பிரதான நோக்கமாகும். அந்தக் கொள்கையில் நாம் உறுதியாக உள்ளோம்.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் எமக்கு எவ்வித போட்டியும் கிடையாது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஜே.வி.பி.யுடனே எமக்கு நேரடிப் போட்டி உள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியைப் பற்றி நாம் சிந்திப்பது கூட இல்லை.
எமக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற வேண்டிய அவசியமில்லை. நாம் அடுத்த ஜனாதிபதியை உருவாக்கும் களத்திலேயே இருக்கின்றோம். எனவே, எதிர்க்கட்சித் தலைவர் பதவி எமக்குத் தேவையில்லை” என்றார்.










