“அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூல விவகாரத்தின் மூலம், எதிர்க்கட்சிகள் மேலும் பிளவடைந்து பலவீனமடைந்துள்ளன என்பதையே நாம் கண்டறிந்தோம்” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
“ஐக்கிய மக்கள் சக்திக்குள்ளேயே பாரிய பிளவு நிலவுகின்றது. இதனால்தான் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக அக்கட்சி நடத்திய போராட்டத்திற்கு ஏனைய எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் போலிப் பிரசாரத்தையே முன்னெடுத்தன. இருப்பினும், அந்த முயற்சி கைகூடவில்லை. அவர்களின் கருத்துகளை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, நீதி மற்றும் நியாயத்தையே மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நீதித்துறை மறுசீரமைப்பு நிச்சயம் இடம்பெறும் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். இதனால்தான் எதிர்க்கட்சிகள் இவ்விவகாரத்திலும் தோல்வியடைந்துள்ளன. அவை தற்போது மேலும் பிளவுபட்டு பலவீனமடைந்துள்ளன” என்றார்.
