மோகினி எல்ல பகுதியில் சுற்றுலா தின விழா கொண்டாட்டம் ஆரம்பம்

2026 உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, மத்திய மாகாண சுற்றுலா சபை மற்றும் நல்லத்தண்ணி சுற்றுலா விடுதி உரிமையாளர்கள் சங்கம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த சிறப்புச் சுற்றுலா தினக் கொண்டாட்ட விழா, நல்லத்தண்ணி மோகினி எல்ல நீர்வீழ்ச்சிக்கு அருகில் இன்று (29) கோலாகலமாகத் தொடங்கியது.

மத்திய மாகாண ஆளுநர் தலைமையில் இந்நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

சிவனொளிபாதமலை, மவுஸ்சாக்கலை நீர்த்தேக்கம், மரே, காட்மோர் மற்றும் மோகினி எல்ல நீர்வீழ்ச்சி ஆகியவற்றை மையப்படுத்தி நல்லத்தண்ணிப் பகுதியை ஒரு முக்கிய சுற்றுலா நகரமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, இந்த ஆண்டுக்கான சுற்றுலா தின விழாவை மோகினி எல்ல நீர்வீழ்ச்சிக்கு அருகில் நடத்த மத்திய மாகாண சுற்றுலாத் திணைக்களம் தீர்மானித்திருந்தது.

இதற்கமைய, இன்றும் நாளையும் (29, 30) இருநாட்கள் சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இன்றைய நிகழ்வுகள் ஆன்மீக வழிபாட்டுடன் தொடங்கின.

மஸ்கெலியா சமன் தேவாலயத்தில் மத்திய மாகாண ஆளுநர், நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீர, நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி, மத்திய மாகாண சுற்றுலா அமைச்சின் செயலாளர் மதுஷானி பியசேன, நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன் மற்றும் மத்திய மாகாண சுற்றுலாத் திணைக்களப் பணிப்பாளர் ஆகியோர் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து, இலங்கை போக்குவரத்து சபையின் (இ.போ.ச) ஹட்டன் டிப்போவினால் புதிதாக வடிவமைக்கப்பட்ட ‘சபாரி’ பேருந்தில், இசை நிகழ்ச்சியுடனும் இராணுவத்தினரின் மிதிவண்டி அணிவகுப்பு முன்செல்லவும், அழைப்பாளர்கள் அனைவரும் நல்லத்தண்ணி மோகினி நீர்வீழ்ச்சிப் பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர்.

அங்கு அதிகாரப்பூர்வ விழா இடம்பெற்றதைத் தொடர்ந்து, மவுஸ்சாக்கலை நீர்த்தேக்கத்தில் இலங்கை விமானப் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நீர் சார்ந்த சாகசச் சுற்றுலா நடவடிக்கைகளை ஆளுநர் உள்ளிட்ட விருந்தினர்கள் பார்வையிட்டனர். இதன்போது, விமானப் படை வீரர்களால் பல சாகசச் செயல்பாடுகள் செய்முறை ரீதியாகச் செய்து காட்டப்பட்டன.

தொடர்ந்து, ஆளுநர் உள்ளிட்ட விருந்தினர்கள் சுற்றுலாப் படகு மூலம் காட்மோர் நீர்வீழ்ச்சியைப் பார்வையிடச் சென்றனர்.

இவ்விழாவில், மத்திய மாகாண சுற்றுலா அமைச்சினால் பயிற்சி அளிக்கப்பட்ட பல சுற்றுலா வழிகாட்டிகளுக்கு (Tour Guides) அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இச்சிறப்புச் சுற்றுலா தினக் கொண்டாட்ட விழா நாளைய தினமும் (30) நல்லத்தண்ணி மோகினி எல்ல நீர்வீழ்ச்சிக்கு அருகில் தொடர்ந்து நடைபெறவுள்ளது.

Related Articles

Latest Articles