இம்ரான் கான் விடுதலை குறித்து விவாதம் நடத்த அனுமதி மறுப்பு: சஜித் அணி அதிருப்தி 

இம்ரான் கான் விடுதலை குறித்து விவாதம் நடத்த அனுமதி மறுப்பு: சஜித் அணி அதிருப்தி 

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யக் கோரி இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்காக முன்வைக்கப்பட்ட சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஆளுங்கட்சியால் இவ்வாறு பிரேரணை நிராகரிக்கப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று இது குறித்து கருத்து வெளியிட்ட அவர், மனிதாபிமான அடிப்படையிலேயே மேற்படி முன்வைக்கப்பட்டது. பாகிஸ்தானின் உள்நாட்டு விவகாரங்கள் அல்லது நீதித்துறை நடவடிக்கையை சவாலுக்குட்படுத்த நான் முற்படவில்லை.” என சுட்டிக்காட்டினார்.

இம்ரான் கானின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்துவதே பிரேரணையின் நோக்கம் என்றும், உலக கிரிக்கெட்டுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய சர்வதேச பிரபலமான ஒருவராக அவர் விளங்குவதாகவும் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ், இந்த விவகாரம் நாடாளுமன்ற அலுவல்கள் குழுவில் கலந்துரையாடப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
அதன் பின்னர் கருத்து வெளியிட்ட வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விடயங்களை விவாதிக்க அரசாங்கம் தயாரில்லை எனத் தெரிவித்தார்.

எனினும், நாடாளுமன்றத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் இம்ரான் கான் விவகாரம் தொடர்பாக தனது தனிப்பட்ட கருத்துக்களை முன்வைக்க அஜித் பி. பெரேராவுக்கு உரிமை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்த அஜித் பி. பெரேரா, கடந்த காலங்களில் பாகிஸ்தான் இலங்கைக்கு வழங்கிய உதவிகளை நாடு மறந்துவிடவில்லை எனத் தெரிவித்தார்.

பாலஸ்தீனம் மற்றும் தென்னாபிரிக்கா தொடர்பான சர்வதேச மனிதாபிமான விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் முன்னர் விவாதிக்கப்பட்டுள்ள நிலையில், இம்ரான் கான் தொடர்பான பிரேரணையை ஏன் விவாதிக்க முடியாது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

…………..

20 இலட்சமாவது சுற்றுலாப் பயணி இலங்கைக்கு வருகை – 3 ஆண்டுகளாக தொடரும் சாதனை

இலங்கை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக 20 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பதிவு செய்துள்ளது. இந்த இலக்கை இன்று (20) எட்டியுள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

20 இலட்சமாவது சுற்றுலாப் பயணியாக ரஷ்யாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

நடாலியா, அவரது கணவர் செர்கெய் மற்றும் மகள் அன்னா ஆகியோர் இந்த மைல்கல்லுடன் தொடர்புடைய சுற்றுலாப் பயணிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கை 6 ஆண்டுகளுக்குப் பின்னர், 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகையை எட்டியிருந்தது. 2025ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் திகதியே இந்த இலக்கை அடைந்திருந்த நிலையில், இவ்வாண்டு நவம்பர் 20ஆம் திகதி அதனை எட்டியுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய சுற்றுலா பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க, உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் இலங்கையின் சுற்றுலாத்துறை தொடர்ந்து மீட்சியடைந்து வருவதையும், அதன் உறுதித்தன்மையையும் இந்த சாதனை பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டார்.

மத்திய கிழக்கில் நீடிக்கும் மோதல்கள், சர்வதேச விமானப் பாதைகளில் ஏற்பட்டுள்ள இடையூறுகள், விமான எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றுக்கு மத்தியிலும் இந்த இலக்கை எட்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

2025 நவம்பரில் ஏற்பட்ட டிட்வா அனர்த்தத்துக்குப் பின்னர் சுற்றுலாத்துறை எதிர்கொண்ட சவால்களையும் நினைவுகூர்ந்த அவர், இத்தகைய சூழலிலும் துறையின் வளர்ச்சி வேகம் தொடர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

நவம்பர் 10 முதல் 20ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாளாந்த சராசரி சுற்றுலாப் பயணிகள் வருகை 7,480 ஆகப் பதிவாகியுள்ளது. இது 2025ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியில் பதிவான 7,130 வருகைகளுடன் ஒப்பிடுகையில் சுமார் 4.9 சதவீத அதிகரிப்பாகும்.

புதிய சர்வதேச விமான சேவைகள் அறிமுகம், நேரடி விமான இணைப்புகள் விரிவாக்கம், புதிய சுற்றுலா சந்தைகளில் நுழைதல் மற்றும் சர்வதேச விளம்பர நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் ஆகியவை இந்த வளர்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், சுற்றுலாத்துறையின் ஊடாக நாட்டுக்குக் கிடைக்கும் பொருளாதார நன்மைகளையும் அதிகரிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய, சர்வதேச தரங்களுக்கு ஏற்ப சுற்றுலா வருமானத்தை மதிப்பிடும் முறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. நாணய மாற்று விகிதங்கள், பொருளாதார நிலைமைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் செலவுப் பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றங்களும் இதன்போது கருத்தில் கொள்ளப்படுகின்றன.

2025ஆம் ஆண்டில் பதிவான மொத்த சுற்றுலாப் பயணிகள் வருகை எண்ணிக்கையை இந்த ஆண்டின் இறுதிக்குள் முறியடிப்பதே அரசாங்கத்தின் அடுத்த இலக்காகும் எனவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

விமான இணைப்புகளை விரிவுபடுத்துதல், சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல், புதிய சந்தைகளை உருவாக்குதல் மற்றும் சுற்றுலா சேவைகளின் தரத்தை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் தனியார் துறை, விமான நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

………..

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம்

சமையல் எரிவாயு விவகாரத்தில் பாவனையாளர்கள் பாதிக்கப்படாத வகையில் தீர்மானங்கள் எடுக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையை வலியுறுத்தியது.

சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களின் தலைமையில் அண்மையில் (18) கூடியபோதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் சமையல் எரிவாயுவை விநியோகிக்கும் தனியார் நிறுவனம் காஸ் சிலிண்டரின் விலைய கணிசமாக அதிகரித்தமை குறித்துக் கலந்துரையாடுவதற்காக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு மற்றும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அதிகாரிகள் குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பினால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் சௌகரியம் தொடர்பிலேயே தாம் இவ்விடயத்தில் தலையிட்டதாகக் குறிப்பிட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் தலைவர், சமையல் எரிவாயு தொடர்பான விலை நிர்ணயத்திற்கான அதிகாரம் தமது அதிகாரசபைக்கு இல்லையென்றும் தெரிவித்தார்.

இருந்தபோதும், குறித்த தனியார் நிறுவனத்துடன் கலந்துரையாடல்களை நடத்தியதன் அடிப்படையிலேயே விலையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் குறித்த தனியார் நிறுவனத்தின் சந்தைப் பங்கு குறைவாக இருப்பதால், தமக்கான எரிவாயுவை அதிக விலைகொடுத்துக் கொள்வனவு செய்ய நேர்வதால் கொள்வனவு செய்த விலையின் அடிப்படையில் எரிவாயு சிலிண்டலின் விலையை அதிகரிக்க நேர்ந்ததாக அந்நிறுவனம் தமக்கு விளக்கமளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இருந்தபோதும், எதிர்காலத்தில் சமையல் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் உறுதிசெய்யுமாறும், விலையேற்றங்களினால் பாவனையாளர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யுமாறும் குழு இங்கு வலியுறுத்தியது.

இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான உபுல் கித்சிறி, எம்.ஏ.சீ.எஸ்.சத்துரி, சுசந்த குமார நவரத்ன, சுதத் பலகல்ல, கிட்ணன் செல்வராஜ் மற்றும் ஞானமுத்து ஸ்ரீநேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

………..

பட்ஜட்டின் இரண்டாவது மதிப்பீடு 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது

2027ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாவது மதிப்பீடு 97 மேலதிக வாக்குகளால் இன்று (20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இரண்டாவது மதிப்பிடு மீதான வாக்கெடுப்பு மாலை 6.50 மணிக்கு நடைபெற்றதுடன், இதில் இதற்கு ஆதரவாக 157 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் பதிவாகின.

2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீ்ட்டை வரவுசெலவுத்திட்ட உரை நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் கடந்த 12ஆம் திகதி முன்வைத்தார்.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நவம்பர் 13ஆம் திகதி முதல் இன்று வரை (20) வரை 07 நாட்கள் இடம்பெற்றன.

இதனைத் தொடர்ந்து குழு நிலை விவாதம் நவம்பர் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை 19 நாட்கள் நடைபெறவுள்ளன. இதற்கு அமைய ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 14ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

………..

 

 

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles