துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கிச் சென்ற விமானத்தின் முதன்மை விமானியைக் கத்தியால் குத்தி, விமானத்தைக் கீழே மோதி விபத்துக்குள்ளாக்க முயன்ற உதவி விமானியைப் பயணிகள் மற்றும் பணியாளர்கள் மடக்கிப் பிடித்ததை அடுத்து, விமானம் சவுதி அரேபியாவில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தை மிகக் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல் எனக் குறிப்பிட்ட நெதன்யாகு, ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இஸ்ரேல் சென்ற ‘பிளைதுபாய்’ (flydubai FZ1073) விமானத்தின் உதவி விமானியிடம் சவுதி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்துவார்கள் எனவும் குறிப்பிட்டார்.
விமானம் தரையிறங்கியதும் கைது செய்யப்பட்ட அந்த உதவி விமானி ஓமான் நாட்டைச் சேர்ந்தவர் என இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் அடையாளம் காட்டியுள்ளார்.
“பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்” என்று நெதன்யாகு தனது அலுவலகம் வெளியிட்ட வீடியோ அறிக்கையில் தெரிவித்தார். விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் பெரும்பாலும் இஸ்ரேலியர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
விமானம் “திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து சுழன்றவாறு கீழ்நோக்கிப் பாயத் தொடங்கியதை” அடுத்து, பயணிகளும் விமானப் பணியாளர் ஒருவரும் காக்பிட் (Cockpit) கதவை உடைத்து உள்ளே சென்றதாகவும், அங்கு உதவி விமானி “விமானத்தின் அமைப்புகளைச் சேதப்படுத்த முயன்றதைக் கண்டதாகவும்” பயணி ஒருவர் கூறியதாக இஸ்ரேலியத் தலைவர் சுட்டிக்காட்டினார்.
“அவர்கள் பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளனர்; பெரும் அசம்பாவிதத்தைத் தடுத்துள்ளனர்” என்று நெதன்யாகு பாராட்டினார்.
முன்னதாக, அந்த விமானத்திலிருந்து அவசர ஆபத்துச் செய்திகள் (Emergency signals) அனுப்பப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Flightradar24 தகவல்களின்படி, முதல் அவசரச் செய்தி அனுப்பப்படுவதற்கு முன்பாக, விமானம் 30 விநாடிகளுக்குள் சுமார் 14,000 அடிகள் வேகமாகக் கீழ்நோக்கி இறங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
விமானம் சவுதி அரேபியாவில் தரையிறங்கிய நேரத்தில், இச்சம்பவம் ஒரு விமானக் கடத்தல் அல்ல என்றும், இது வேறு வகையான பாதுகாப்பு மீறல் என்றும் இஸ்ரேலிய பிரதமரின் செய்தித் தொடர்பாளர் டோரன் ஸ்பீல்மேன் தெரிவித்துள்ளார்.
மேலும், பெயர் குறிப்பிட விரும்பாத இஸ்ரேலிய அதிகாரிகள் கூறுகையில், முதற்கட்ட மதிப்பீட்டின்படி இது ஒரு “பயங்கரவாதத் தாக்குதல் முயற்சி” என்றும், விமானிகளின் மனநலம் சார்ந்த பிரச்சனை எதுவும் இதற்குக் காரணம் அல்ல என்றும் தெரிவித்துள்ளனர்.
