அன்பின் உச்சம்: ஒரு கிட்னியை வழங்கி மரணத்தின் பிடியிலிருந்து காதல் கணவனை மீட்ட மனைவி
வெற்றி வாய்ப்பு 10 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தபோதிலும், கணவரை இழக்க விரும்பவில்லை என்ற ஒரே எண்ணத்திற்காக, யுரேமியா (uraemia) நோயினால் பாதிக்கப்பட்ட தனது கணவருக்கு சீனப் பெண் ஒருவர் தனது சிறுநீரகத்தைத் தியாக உணர்வுடன் தானமாக வழங்கியுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம், 25 வயதான லியாங் (Liang) என்ற பெண், குவாங்சோ மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 3-வது இணைந்த மருத்துவமனையில் (Third Affiliated Hospital of Guangzhou Medical University) தனது இடது சிறுநீரகத்தை 33 வயதான கணவர் சங் (Chung) என்பவருக்குத் தானமாக அளித்தார்.
சங்கிற்கு பிறப்பிலேயே சிறுநீரகக் குழாய் இயல்புக்கு மாறாகப் பெரிதாகும் congenital megaureter என்ற பாதிப்பு இருந்தது. இதற்காகத் தொடர் சிகிச்சை பெற்று வந்தபோதிலும், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவரது நோய் முற்றி ‘யுரேமியா’ என்ற நிலையை அடைந்தது.
சங்கின் உடல்நலக் குறைவையும் பொருட்படுத்தாமல், லியாங் அவரை கடந்த ஆண்டு ஜனவரியில் திருமணம் செய்துகொண்டார்.
இத்தம்பதியினருக்குச் சிறுது காலத்திலேயே ஆண் குழந்தையும் பிறந்தது. உயிரிழந்த கொடையாளரிடமிருந்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பெறுவதற்காக சங் மூன்று ஆண்டுகளாகக் காத்திருப்போர் பட்டியலில் இருந்தார்.
இருப்பினும், அவரது ‘O நெகடிவ்’ (O negative) இரத்த வகைக்குப் பொருத்தமான கொடையாளர்கள் கிடைப்பது அரிது என்பதால், அவர் மேலும் 2 முதல் 7 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
துரதிர்ஷ்டவசமாக, சங்கின் உடல்நிலை மேலும் தாமதிப்பதை அனுமதிப்பதாக இல்லை; ஒருமுறை அவருக்குக் கடுமையான மாரடைப்பும் ஏற்பட்டது. இந்தச் சூழ்நிலையில்தான், லியாங் தனது ஒரு சிறுநீரகத்தை கணவருக்குத் தானமாக வழங்க முடிவு செய்தார்.
“நான் அவரை இழந்துவிடுவேனோ என்று பயந்தேன். சிறுநீரகத் தானத்திற்காகக் காத்திருக்க அவருக்கு இனி போதிய நேரம் இல்லாமல் போகலாம் என்று தோன்றியது” என லியாங் தெரிவித்தார்.
மருத்துவமனையின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைத் துறையைச் சேர்ந்த மருத்துவர் ஜாவோ ஜிகியாங் (Dr Zhao Jiqiang) கூறுகையில், இருவருக்கும் சிறுநீரகம் சரியாகப் பொருந்தியிருப்பது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றார்.
லியாங்கின் இரத்த வகையும் ‘O நெகடிவ்’ ஆக இருந்தது. மேலும், நடத்தப்பட்ட பரிசோதனையில் (cytotoxicity test) கணவரின் உடலில் உறுப்பை நிராகரிக்கும் எதிர்ப்பான்கள் (antibodies) இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
குறிப்பாக லியாங் கடந்த ஆண்டுதான் சங்கின் குழந்தையைப் பெற்றெடுத்தார் என்பதால், இந்தப் பரிசோதனை முடிவு வேறுவிதமாக (எதிர்மறையாக) வரவும் அதிக வாய்ப்பிருந்ததாக மருத்துவர் குறிப்பிட்டார்.
இரத்த உறவு இல்லாத நபர்களுக்கு இடையிலான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் வெற்றி வாய்ப்பு வழக்கமாக 5 முதல் 10 சதவீதம் மட்டுமே இருக்கும் என்று மருத்துவர் ஜாவோ விளக்கமளித்தார்.
நல்லவேளையாக, அறுவை சிகிச்சை வெற்றியடைந்து லியாங்கின் சிறுநீரகம் சங்கின் உடலில் சிறப்பாகச் செயல்படத் தொடங்கியது. பூரண குணமடைந்த சங், செப்டம்பர் 23 அன்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
இந்த அறுவை சிகிச்சை அனுபவம் “ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதை விட 10 மடங்கு அதிக வலி நிறைந்தது” என்று லியாங் பின்னர் குறிப்பிட்டார். ஆயினும், தான் எடுத்த முடிவிற்காக அவர் சிறுதும் வருந்தவில்லை.
“எனது கணவர் குணமடையும் வரை, எனக்கு எல்லாமே நன்றாகத்தான் இருக்கும்” என்று அவர் கூறினார். தனது சிறுவயதில் பெற்றோர் விவாகரத்து பெற்ற பிறகு, அவர்கள் தனது சகோதரனுக்கே முன்னுரிமை அளித்ததாகவும், தன்னை வளர்க்க விரும்பாததால் பாட்டியின் பராமரிப்பிலேயே வளர்ந்ததாகவும் லியாங் பகிர்ந்துகொண்டார்.
சங் மட்டுமே தான் எப்போதும் விரும்பிய அன்பையும் ஒரு குடும்பத்தையும் தனக்கு வழங்கியதாக அவர் உருக்கத்துடன் கூறினார்.
லியாங்கின் காணொளியைப் பார்த்த இணையவாசி ஒருவர், “நான் அந்த இடத்தில் இருந்திருந்தாலும் இதையேதான் செய்திருப்பேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
“இப்படி ஒரு அருமையான மனைவி கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவர் லியாங்கை வாழ்நாள் முழுவதும் கண்ணின் மணி போலப் பாதுகாக்க வேண்டும்” என்று மற்றொருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
