உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக, குற்றப் புலனாய்வுப்பிரிவு தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்திருந்த ரீட் மனுவைச் மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹாந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சனல் 4 ஆவணப்படத்தில், அசாத் மௌலானா முன்வைத்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணைகளின் ஒரு பகுதியாக, கோட்டை நீதிவான் நீதிமன்றம் தனக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதித்ததைத் தொடர்ந்து இந்த மனுவைத் தாக்கல் செய்வதாக கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்திருந்தார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழோ அல்லது வேறு எந்தச் சட்டத்தின் கீழோ தனது கைதுக்கோ அல்லது தடுப்புக்காவலுக்கோ சட்டப்பூர்வமான அடிப்படை ஏதுமில்லை என்றும் கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டிருந்தார்.










