துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்ற விமானத்தின் விமானியைக் குத்தி, விமானத்தைக் கைப்பற்ற முயன்ற நபருக்கு “இஸ்லாமிய தீவிரவாத சித்தாந்தங்கள் திணிக்கப்பட்டிருந்தது” விசாரணையில் தெரியவந்துள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை, பயணம் தொடங்கிய இரண்டு மணி நேரத்தில் Flydubai) விமானம் 17,000 அடிக்கும் அதிகமான உயரத்திலிருந்து (5,200 மீட்டருக்கு மேல்) திடீரெனக் கீழே இறங்கியது.
அதன்பின், பயணிகள் மற்றும் பணியாளர்கள் இணைந்து தாக்குதல் நடத்தியவரைக் கட்டுப்படுத்தி, விமானத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி பாதுகாப்பாகத் தரை இறக்கினர்.
Fox News ஊடகத்திற்குப் பேட்டியளித்த நெதன்யாகு, ஓமான் நாட்டைச் சேர்ந்த அந்தத் தாக்குதலாளி “விமானத்தைக் கீழே வீழ்த்தத் திட்டமிட்டிருந்தார்” என்பது மிகவும் சாத்தியமான ஒன்றாகத் தெரிகிறது எனக் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், இந்தச் சம்பவம் ஏதேனும் பயங்கரவாத நடவடிக்கையுடனோ அல்லது நோக்கத்துடனோ தொடர்புடையதா என்பது குறித்து விசாரணைத் தொடங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) அரசு செய்தி முகமை தெரிவித்துள்ளது.
சம்பவத்திற்குப் பிறகு விமானம் அவசரமாகத் தரை இறக்கப்பட்ட சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம், மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு முதன்மை விமானி மற்றும் துணை விமானி ஆகிய இருவரைகளுமே வியாழக்கிழமை காலை ஐக்கிய அரபு அமீரகத்திற்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடைபெற்ற விமானம் ஐக்கிய அரபு அமீரகத்தில் பதிவு செய்யப்பட்டு, அந்நாட்டின் கொடியின் கீழ் இயங்குவதால், இந்தச் சம்பவத்தின் அதிகாரப்பூர்வ விசாரணையைத் தாங்களே மேற்கொள்வதாக அமீரக அதிகாரிகள் முன்னதாக அறிவித்திருந்தனர்.
தாக்குதல் நடத்திய நபர் பயணிகள் மற்றும் பணியாளர்களால் கட்டுப்படுத்தப்பட்டுப் பிணைக்கப்பட்ட பிறகு, “என்னைக் கொன்றுவிடுங்கள், என்னைக் கொன்றுவிடுங்கள்” என்று விமானப் பணியாளர்களைப் பார்த்துக் கத்தியதாக நெதன்யாகு கூறினார்.
“எனவே அவர் தற்கொலை எண்ணத்தில் இருந்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பயணிகள் அனைவரும் உள்ளே இருந்த நிலையில், அவரது பின்னணியில் கண்டறியப்பட்ட தீவிரவாதப் போக்குகளோடு இதைப் பொருத்திப் பார்த்தால், சம்பவம் குறித்த ஒரு தெளிவான முடிவு நமக்குக் கிடைக்கும்” என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், இந்தச் சம்பவத்தின் பின்னணியிலுள்ள முதன்மை நோக்கம் குறித்து இப்போது எந்தவொரு இறுதி முடிவிற்கும் வர விரும்பவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதேசமயம், டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அமீரக அதிகாரிகள், இந்தச் சம்பவத்திற்கு ஈரான் பொறுப்பாக இருக்கலாம் எனக் ஊடகங்களுக்குச் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால், தெஹ்ரானைக் நேரடியாகக் குற்றம் சாட்டவில்லை.
இதற்கிடையே தான் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அந்த வீடியோவில் பெஞ்சமின் நெதன்யாகு பேசியதாவது:
”காலம் செல்ல செல்ல நிலைமை தெளிவாகி வருகிறது. விமான தாக்குதல் நடத்தியவர் இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு ஆட்பட்டுள்ளார்.
அனைத்து பயணிகளுடன் விமானத்தை தரையில் மோத செய்து எல்லோரையும் கொல்வது தான் அந்த பைலட்டின் நோக்கமாக இருந்துள்ளது. அதற்காக தான் அவர் வந்துள்ளார். அவரை யாராவது அனுப்பினார்களா? என்பது பற்றி விசாரித்து வருகிறோம். அவரை அனுப்பியவர் யாராக இருந்தாலும் கடும் விலையை கொடுக்க வேண்டி இருக்கும்” எச்சரிக்கை விடுத்துள்ளார்.
