தனது 113-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் கென் வீக்ஸ் (Ken Weeks), தனது நீண்ட ஆயுளுக்குக் காரணம் என குடும்பத்தினர் குறிப்பிடும் வழக்கமான பழக்கவழக்கங்களை இன்றும் தொடர்ந்து பின்பற்றி வருகிறார்.
“முதியோர் பராமரிப்பு இல்லத்தில் இருந்தபோதிலும், தனக்கான காரியங்களைத் தானே செய்யவே அவர் விரும்புகிறார்” என்று அவரது பேத்தி யூனிஸ் வீக்ஸ் (Eunice Weeks) தெரிவித்தார்.
“அவர் சொந்தமாகவே உணவருந்த விரும்புகிறார். தனது படுக்கையைத் தானே சரிசெய்து கொள்கிறார்; தனது ஆடைகள் எங்கு உள்ளன என்பதை அறிந்து, ஆடைகளைத் தானே தேர்வு செய்ய விரும்புகிறார்,” என்றார்.
உலகின் இரண்டாவது மிக மூத்த நபராக வீக்ஸை ‘லாஞ்செவிகுவெஸ்ட்’ (LongeviQuest) அமைப்பு அதிகாரப்பூர்வமாகப் பட்டியலிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மிக மூத்த மனிதரான இவரைப் போன்றே, பிரேசிலில் வாழும் உலகின் மிக மூத்த மனிதரான 114 வயது நிரம்பிய ஜோவா மரினோ நெட்டோவும் (João Marinho Neto) அதே அக்டோபர் 5-ஆம் திகதியை பிறந்தநாளாகப் பகிர்ந்து கொள்கிறார். இம்முறை அவர்கள் இருவருமாக முதன்முறையாகத் தங்களுக்குள் பிறந்தநாள் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
இன்றைய காலகட்டத்தில் பிரபலமாக இருக்கும் ‘பயோஹேக்கிங்’ (biohacking) மற்றும் சத்து மாத்திரைகள் போன்றவை வீக்ஸின் இந்த நீண்ட ஆயுளுக்குக் காரணமாக இருக்கவில்லை; இருப்பினும் அவரது வாழ்க்கை முறை குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது.
“அவர் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார். மது அருந்தும் பழக்கமோ, புகைப்பிடிக்கும் பழக்கமோ அவருக்கு இல்லை; வெள்ளை நிற ரொட்டியை சாப்பிட்டபோதிலும், நவீன ஆரோக்கிய உணவுகளிலோ இனிப்புகளிலோ அவர் அதிக ஆர்வம் காட்டவில்லை. அவர் சாப்பிட்டவை எல்லாமே சாதாரண எளிமையான உணவுகள்தான்” என்று அவரது மகன் இயன் வீக்ஸ் (Ian Weeks) கூறினார்.
கென் வீக்ஸின் உடல் இன்னமும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும் நிலையில், 113 ஆண்டுகால பயன்பாட்டினால் அவரது குரல் சற்றே பாதிக்கப்பட்டுள்ளது.
“அவருக்குப் பேசுவதில் சிரமம் உள்ளது; அவரால் தெளிவாகப் பேச முடிவதில்லை” என்று இயன் வீக்ஸ் தெரிவித்தார்.
யூனிஸ் வீக்ஸ் தனது தாத்தாவை “மென்மையானவர்”, “கருணையுள்ளவர்” மற்றும் பழக்கவழக்கங்களை முறையாகப் பின்பற்றுபவர் என விவரித்தார்.
தனது 105-ஆவது வயதில் ‘விடான் குடியிருப்பு பராமரிப்பு இல்லத்திற்கு’ (Whiddon Residential Care) மாறிய பின்னரும் அவரது இந்தப் பழக்கவழக்கங்கள் தொடர்ந்தன.
அவ்வில்லத்தின் சேவை மேலாளர் சான்ட்ரா ஆஸ்போர்ன் (Sandra Osborne), திரு. வீக்ஸ் இன்றும் சுறுசுறுப்பாக இருப்பதாகக் கூறினார்.
“அவருக்கு தினமும் ஒரு குறிப்பிட்ட அட்டவணை உள்ளது. 113 வயதில் அவரது நடமாட்டம் சற்று குறைந்திருந்தபோதிலும், அவர் தனது உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறார். தினமும் இருமுறை மாடியின் தளம் முழுவதையும் இரு சுற்றுகள் நடந்து முடிக்கிறார். அவர் உண்மையிலேயே ஆச்சரியமானவர்,” என்று அவர் தெரிவித்தார்.
அவர் எப்போதுமே புதிய விஷயங்களை முயற்சி செய்ய ஆர்வமாக இருப்பதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
“அவர் இன்னமும் உலக நிகழ்வுகளைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளார். இன்றும் செய்திகளைக் கேட்டு, உலகில் என்ன நடக்கிறது என்பது குறித்து கேள்விகளை எழுப்புகிறார். இதன் மூலம் அவரது அறிவாற்றல் துல்லியமாக வெளிப்படுவதைக் காண முடிகிறது.
பராமரிப்பு இல்லத்தைத் தாண்டி உலக விஷயங்களில் கவனம் செலுத்தும் அவர், செய்திகள் மற்றும் உலக நிகழ்வுகள் குறித்துத் தொடர்ந்து பேசுகிறார்,” என்று யூனிஸ் வீக்ஸ் கூறினார்.
“கடவுள் தன்னுடன் இருக்கிறார், அவர் தன்னைப் பாதுகாப்பார் என்ற உறுதியான நம்பிக்கை அவரிடம் உள்ளது. அந்த இறைநம்பிக்கையே அவரைத் தொடர்ந்து தாங்கிப் பிடிப்பதாகவும், ஆன்மீக ரீதியில் அவருக்கு அமைதியைத் தருவதாகவும் நான் நினைக்கிறேன்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தனது தாத்தா அனைத்து வேலைகளையும் செய்யக்கூடிய ஒரு பன்முகத்தன்மை கொண்டவர் என்றும் யூனிஸ் வீக்ஸ் கூறினார்.
“அவர் ஒரு வேலையைச் செய்து அது சரியாக வரவில்லை என்றால், வேறு வேலைக்கு மாறுவார். பின்னர் ஒரு மீன்பிடிப் படகைக் கட்டினார்; அதன்பின் ஒரு கடை வைிருந்தார்; தொடர்ந்து தேர்தல் அலுவலகத்திலும் பணியாற்றினார். அவர் உழைத்துக் கொண்டே இருந்தார்; பல வழிகளில் அவர் ஒரு வழக்கமான ஆஸ்திரேலியப் போராளி (Aussie battler)” என்றார்.
பழைய ரக காரில் பயணம்
கென் வீக்ஸ் எப்போதுமே பொருட்களைப் பழுதுபார்ப்பது மற்றும் உருவாக்குவதில் — படகுகளைக் கட்டுவது, கார்களைச் சீரமைப்பது போன்றவற்றில் — மிகுந்த ஆர்வம் கொண்டவர். எனவே, தனது 113-ஆவது பிறந்தநாளை ஒரு பழைய ரக (vintage) காரில் கழித்தது அவருக்கு மிகவும் பொருத்தமாக அமைந்தது.
அவரது குடும்பத்தினர், அவர் 100 ஆண்டுகளுக்கும் முன்ப படித்த பள்ளி உள்ளிட்ட அவர் வாழ்ந்த பழைய இடங்களுக்கு அவரை அந்தப் பழங்கால காரில் அழைத்துச் சென்று நினைவலைகளைப் புதுப்பித்தனர்.
“பழைய நினைவுகள் இன்னமும் அவரது மனதில் உள்ளன, ஆனால் அவை நினைவுக்கு வர சற்று கூடுதல் நேரமாகிறது. தனது சிறுவயது மற்றும் இளமைப் பருவ நினைவுகளை அவர் நன்றாக நினைவில் வைத்துள்ளார்,” என்று யூனிஸ் வீக்ஸ் கூறினார்.
“வெளியே வந்து எல்லாரும் அந்தப் பழங்கால காரோடு காத்திருப்பதைப் பார்த்ததும், முகத்தில் பெரிய புன்னகையோடு, ‘அடடா, இதெல்லாம் எனக்கு மிகவும் அதிகமாக இருக்கிறது’ என்று அவர் கூறினார்.”
113 ஆண்டுகளைக் கொண்டாடுவது அரிதான ஒன்றாகத் தோன்றலாம், ஆனால் ஆஸ்திரேலியர்கள் தங்களது கொண்டாட்டங்களுக்குத் தயாராக வேண்டிய காலம் வந்துவிட்டது.
ஆஸ்திரேலிய புள்ளிவிவரப் பணியகத்தின் (ABS) கணிப்புகளின்படி, 100 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதை எட்டும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2019-ஆம் ஆண்டில், 100 வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 4,300 ஆக இருந்தது.
இன்று, அந்த எண்ணிக்கை 8,300-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
எதிர்காலத்தைக் கணித்துப் பார்த்தால், 2070-ஆம் ஆண்டிற்குள் 100 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 60,000-ஐ நெருங்கும் என மதிப்பிட்டுள்ளது.
தனது தாத்தாவின் இந்த நீண்ட ஆயுள் தனக்கு வியப்பளிப்பதாக யூனிஸ் வீக்ஸ் கூறினார்.
“அவர் ஒரு சாதாரண மனிதர். ஒரு கிராமப்புற நகரத்தில் வளர்ந்து, குடும்பத்தைக் கவனித்துக்கொண்டு, பல்வேறு கடினமான மற்றும் சுறுசுறுப்பான வேலைகளைத் தொடர்ந்து செய்தார்; ஆனால் அவர் விசேஷமானவர் என்று சொல்ல முடியாது. அப்படிப்பட்ட ஒரு சாதாரண மனிதர் இவ்வளவு காலம் வாழ்ந்திருப்பதுதான் மிகவும் விசேஷமானது.
அவர் எனக்குத் தாத்தாவாக இருப்பதற்கு நான் இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்,” என்று அவர் முடித்தார்.










