சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தாளத்திற்கு ஆடி, செலவை ஈடுசெய்யும் வகையில் (Cost recovery pricing) எரிபொருள் விலைகளை உயர்த்த தற்போதைய அரசாங்கத்திற்கு எந்த உரிமையும் இல்லை என்றும், IMF இன் கைப்பாவையாக மாறாமல் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
இன்று (05) வெளியிட்ட விசேட அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
வாக்குறுதியை மீறிய அரசாங்கம்:
வரி, கமிஷன் மற்றும் இடைத்தரகர்களின் லாபத்தை நீக்கி, துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் விலையிலேயே மக்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என்பதே ஜனாதிபதி தேர்தலில் வழங்கப்பட்ட பிரதான வாக்குறுதியாகும்.
IMF உடனான இணக்கப்பாட்டை மாற்றி அமைப்போம் என “வளமான நாடு – அழகான வாழ்க்கை” தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளித்துவிட்டு, தற்போது பழைய இணக்கப்பாட்டையே அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகிறது.
அரசாங்கத்தைத் திருப்பித் தாக்கும் ஆயுதம்:
மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் IMF உடன்படிக்கையை அரசாங்கம் மாற்றி அமைக்கும் என்ற நம்பிக்கையிலேயே மக்கள் ஆணையளித்தனர். ஆனால் வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியதால், இந்த IMF இணக்கப்பாடு தற்போதைய ஜே.வி.பி (JVP) தலைமையிலான அரசாங்கத்திற்கே திரும்பித் தாக்கும் ஆயுதமாக மாறியுள்ளது.
வரி மரணப் பொறி:
மக்கள் மீது VAT உள்ளிட்ட பல்வேறு வரிகளைச் சுமத்தி, மக்களை நசுக்கி அரச வருமானம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பிற்போக்குத்தனமான வரி மரணப் பொறியில் இருந்து மக்களை விடுவிக்க வேண்டும். செல்வந்தர்களுக்கு இன்றி, பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்களுக்கு முறையான பொறிமுறை மூலம் எரிபொருள் சலுகைகளை வழங்க வேண்டும்.
நடைமுறைக்குச் சாத்தியமற்ற வாழ்வாதாரத் தொகை:
மாதம் ஒன்றிற்கு ரூ. 17,315 நிதியைக் கொண்டு ஒருவரால் வாழ முடியும் என அரசாங்கம் கூறுவது வெறும் கனவு மாத்திரமே. தற்போதைய பொருளாதாரச் சூழலில் இந்தத் தொகையைக் கொண்டு மக்கள் வாழ முடியாது.
சரியான தரவுகளின் அடிப்படையில் நிவாரணம்:
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் போலியான தரவுகளைப் பயன்படுத்தாமல், மின்சார நுகர்வு போன்ற விஞ்ஞானபூர்வ முறைகள் மூலம் குறைந்த வருமானம் பெறுவோரைத் துல்லியமாக அடையாளம் கண்டு சலுகைகளை வழங்க வேண்டும்.
இனிமேலேனும் IMF இன் கைப்பாவையாக மாறாமல், திறைசேரியில் சேமிக்கப்பட்டுள்ள பணத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு உடனடி எரிபொருள் சலுகைகளை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
