மண்சரிவு அபாயம்: மூன்று லயன் அறைகளில் பாரிய வெடிப்புகள் – 6 குடும்பங்களை வெளியேறுமாறு உத்தரவு

எல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பள்ளகெட்டுவ இந்தகல தோட்டத்தில் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள மூன்று லயன் குடியிருப்பு தொகுதிகளில் வீடுகளின் சுவர்களில் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுவர்கள் மற்றும் கட்டிடப் பகுதிகளில் வெடிப்புகள் காணப்படுவதாகவும், தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலையால் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் எனவும் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், அப்பகுதியில் வசிக்கும் ஆறு குடும்பங்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் எல்ல பிரதேச செயலக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சுமார் நூறு வருடங்கள் பழமையான தோட்டக் குடியிருப்புகளில் வசித்து வரும் இம்மக்கள், தங்களுக்கு ஏற்பட்டுள்ள அபாயத்தை கருத்திற்கொண்டு மாற்று வீடுகள் அமைத்துத் தருமாறு நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மாற்று வீடுகளை அமைப்பதற்காக தோட்ட நிர்வாகத்தினால் காணிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், எனினும் இதுவரை சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் அல்லது அமைச்சின் ஊடாக அந்த காணிகளில் வீடுகளை அமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவில்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

“எங்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல எந்த தயக்கமும் இல்லை. ஆனால் மாற்று வீடுகள் இல்லாத நிலையில் எங்கு செல்வது? வீடுகள் அமைக்கும் பணிகளை உடனடியாக ஆரம்பித்தால், இந்த ஆபத்தான குடியிருப்புகளில் இருந்து வெளியேற நாங்கள் தயாராக இருக்கிறோம்” என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது மூன்று லைன் குடியிருப்புகளிலும் சுவர்களில் பாரிய வெடிப்புகள் காணப்படுவதால், அதிகாரிகள் உடனடியாக நேரடி கள ஆய்வை மேற்கொண்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மண்சரிவு அபாயம் மேலும் அதிகரிப்பதற்கு முன்னர், குறித்த ஆறு குடும்பங்களுக்கும் மாற்று வீடுகளை அமைக்கும் பணிகளை அவசர அடிப்படையில் ஆரம்பித்து, பாதுகாப்பான இடங்களுக்கு அவர்களை நிரந்தரமாக குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பதுளை – சுரேஷ்ராஜரத்னம்

 

Related Articles

Latest Articles