மலையகத் தமிழர்களினதும் அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலைக்காக குரல் கொடுத்த – ஆய்வு கட்டுரைகளை எழுதிய – விழிப்புணர்வு நிகழ்வுகளை முன்னெடுத்த தமிழ்த் தேசிய, சிவில் சமூக செயற்பாட்டாளரான சி.அ.யோதிலிங்கம் நேற்றிரவு காலமானார்.
சமூக விஞ்ஞான ஆய்வு மன்றத்தின் தலைவரும், சட்டத்தரணியும், அரசியல் ஆய்வாளருமான சி.அ.யோதிலிங்கம், எட்டு மணிநேரம் நடந்த இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் யாழ். வைத்தியசாலையில் மரணமாகியுள்ளார்.
சி.அ.யோதிலிங்கம் குரல் அற்றவர்களின் குரலாகவும், சமூக நீதிக்காகவும், அநீதிக்கு எதிராகவும் அரசியல் போராட்டங்கள் பலவற்றில் முன்னின்று செயற்பட்டவர்.
தமிழ் மக்களின் அரசியல் விடுதலை, மலையக மக்களின் உரிமைகள், அரசியலமைப்பு சார்ந்த பெருமளவு நூல்களையும் இவர் எழுதி வெளியிட்டுள்ளார்.
1. மலையகத் தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்க வலியுறுத்தியமை
மலையகத் தமிழ் மக்களும் இலங்கையின் அரசியலமைப்பில் தனித்துவமான தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர்களில் சி. அ. ஜோதிலிங்கம் முக்கியமானவர்.
மலையகத் தமிழ் மக்களின் அரசியல் அடையாளம், தேசிய இன உரிமைகள், அரசியலமைப்பு அங்கீகாரம் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பாகத் தொடர்ச்சியாகக் கருத்துகளை முன்வைத்து வந்துள்ளார்.
2. பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமூகப் பணிகள்
மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைந்து, அவர்களுக்கான உதவித் திட்டங்களையும் சமூகப் பணிகளையும் அவர் தனது மனைவியுடன் இணைந்து முன்னெடுத்துள்ளார். புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதரவுடன் பல்வேறு உதவித் திட்டங்களை முன்னெடுத்ததுடன், நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்களின் பகுதிகளுக்குச் சென்று பணியாற்றியமையும் அவரது சமூகப் பங்களிப்பின் முக்கிய அம்சமாகும்.
3. மலையக சமூக ஆய்வு மையத்தின் ஊடான செயற்பாடுகள்
மலையக சமூக ஆய்வு மையத்துடனான அவரது தொடர்பும் செயற்பாடுகளும் மலையக மக்களின் சமூக, அரசியல் மற்றும் தேசிய அடையாளம் தொடர்பான விடயங்களில் முக்கியத்துவம் பெறுகின்றன.
மாற்று மே தினம் மற்றும் மலையக தேசிய பொங்கல் விழா உள்ளிட்ட நிகழ்வுகள் மற்றும் செயற்பாடுகளுடன் அவர் இணைந்து செயலாற்றியுள்ளார்.
மலையக மக்களின் உரிமைகள், அடையாளம் மற்றும் சமூக முன்னேற்றம் தொடர்பான விடயங்களில் சுமார் இரண்டு தசாப்தங்களாகத் தொடர்ந்து எழுதியும் கருத்துகளை முன்வைத்தும் வந்துள்ளார்.
4. இளைஞர்களுக்கான அரசியல் கல்வி
மலையகப் பிரதேச இளைஞர்களிடையே அரசியல் அறிவையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதிலும் அவர் பங்களித்துள்ளார். அரசியலமைப்பு, அதிகாரப் பகிர்வு, மலையகத் தமிழ் தேசியம் உள்ளிட்ட விடயங்களில் இலவச வகுப்புகளை நடத்தி, இளைஞர்கள் தமது அரசியல் உரிமைகள் மற்றும் சமூகத்தின் எதிர்காலம் குறித்துப் புரிந்துகொள்ள உதவியுள்ளார்.
