நுவரெலியா அம்பேவல பகுதியில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது

நுவரெலியா, அம்பேவல பட்டிபொல பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களை நுவரெலியா மாவட்ட வன அலுவலக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

நேற்று முன்தினம் 12 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இவர்கள், நேற்று 13 ஆம் திகதி நுவரெலியா நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

இதன்போது சந்தேகநபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, ஒருவருக்கு ரூ. 45,000 வீதம் ஐந்து பேருக்கு ரூ. 2,25,000 அபராதமும், பாதுகாக்கப்பட வேண்டிய வனப்பகுதிக்கு சேதம் ஏற்படுத்தியதற்காக இழப்பீடாக ரூ. 25,000 உட்பட மொத்தம் ரூ. 2,50,000 செலுத்தும்படி நீதவான் உத்தரவிட்டார்.

பெல்மடுல்ல, பலாங் கொடை, நாவலப்பிட்டி மற்றும் அம்பேவெலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 25 முதல் 40 வயதிற்குட்பட்ட நபர்களுக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் பல நாட்களாக மேற்படி வனப்பகுதியில் கொத்மலை ஓயாவிற்கு நீர் செல்லும் எல்ஜின் ஓயா அருகே பெரிய குழிகளைத் தோண்டி, மாணிக்கக்கல் அடங்கிய படிமங்களை எடுத்து எல்ஜின் ஓயாவில் கழுவி பெருமளவில் சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக நுவரெலியா மாவட்ட வன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles