2027 முதல் கண்டியில் மெட்ரோ பஸ் சேவை: நடவடிக்கை ஆரம்பம்
கண்டி நகரில் 2027-ஆம் ஆண்டில் ‘மெட்ரோ நகர்ப்புற சொகுசு போக்குவரத்து’ (Metro Urban Luxury Transport) பேருந்து சேவையை அறிமுகப்படுத்துவதற்கான திட்டமிடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
இதற்கான ஆரம்பக்கட்ட திட்டமிடல் நடவடிக்கைகள் இன்று 15 ஆம் திகதி தொடங்கப்பட்ட நிலையில், சாத்தியமான பயணப் பாதைகள் மற்றும் செயல்பாட்டுத் தேவைகளை மதிப்பீடு செய்வதற்காக மெட்ரோ பேருந்து ஒன்று பரீட்சார்த்த ஓட்டத்திலும் (Test run) ஈடுபடுத்தப்பட்டது.
பொருத்தமான பயணப் பாதைகளைக் கண்டறிதல், பேருந்துகளுக்கான தொழில்நுட்ப விவரக்குறிப்புகளைத் தீர்மானித்தல் மற்றும் சாத்தியமான பேருந்து நிறுத்தங்களை மதிப்பீடு செய்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்டே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகப் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
கண்டியில் அடுத்த ஆண்டு மெட்ரோ பேருந்து சேவையை அறிமுகப்படுத்துவதற்கான முதற்கட்ட ஆயத்தங்களின் ஒரு பகுதியாகவே இந்த பரீட்சார்த்த ஓட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.










