இலங்கையின் அரச வருமானம் ஈட்டும் பிரதான நிறுவனங்களின் மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் பணிகளின் முன்னேற்றம் தொடர்பில், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் வருமான நிர்வாக, மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் பிரிவு (RARMB) ஆகியவற்றின் அதிகாரிகளின் பங்கேற்புடன் விசேட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நேற்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, நாட்டில் அரச வருமானம் ஈட்டுகின்ற முதன்மை நிறுவனங்களான உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் மதுவரித் திணைக்களம் ஆகியவற்றின் வருமானத்தை ஈட்டும் வினைத்திறன் குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பாராட்டுத் தெரிவித்தனர்.
அத்துடன், அந்நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இந்த மூன்று நிறுவனங்களும் இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ள மறுசீரமைப்புகள் குறித்து ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இங்கு தெளிவுபடுத்தினார்.
மேலும், குறித்த நிறுவனங்களின் இடர் முகாமைத்துவ (Risk Management) திறனை வலுப்படுத்துதல், மனிதவள அபிவிருத்தி மற்றும் கணனி கட்டமைப்புகளை திறம்பட பராமரிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இதன்போது கவனம் செலுத்தினர்.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சீவலி அருக்கொட, சர்வதேச நாணய நிதியத்தின் சார்பில் வருமான நிர்வாக சிரேஷ்ட பொருளாதார நிபுணர் (ஆசியா மற்றும் பசுபிக், ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியம்) சிண்டி நெகுஸ், வருமான நிர்வாக ஆலோசகர் அலிசன் லிஸ்டர், இலங்கையின் வதிவிட வருமான ஆலோசகர் கிரகரி டொபின் ஆகியோர் உட்பட ஜனாதிபதி அலுவலகத்தின் வருமான நிர்வாக, மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
