மலையகத் தமிழர்களை சிறு தோட்ட உடமையாளர்களுக்கும் கடப்பாடு பிரித்தானியாவுக்கும் உண்டு

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பெருந்தோட்டக் கைத்தொழிலுக்காக அழைத்துவரப்பட்ட தமிழர்கள் இன்று பெருந்தோட்டத் துறை வீழச்சியோடு தமது வாழ்வாதாரத்தை கட்டமைத்துக் கொள்வதில் பெரும் சவால்களை எதிர்கொள்கின்றனர்.

அதேநேரம் மலையகத் தமிழர்களை ஓரம்கட்டி தென்பகுதி சிங்கள மக்களை நோக்கிய சிறு தோட்ட உடமையாக பெருந்தோட்டக் கைத் தொழில் நிலைமாற்ப்பட்டு வருகிறது.

எனவே, தென்பகுதி சிங்கள மக்களைப் போன்று மலையகத் தமிழ் மக்களும் சிறு தோட்ட உடமையாளர்களாக்கப்படுவதன் மூலமே அவர்களது வாழ்வாதாரத்தையும் இருப்பையும் பலப்படுத்த முடியும். அதனை நடைமுறைக்குகொண்டு வரும் கடப்பாடு இலங்கைக்கு இந்த மக்களை அழைத்து வந்தவர்கள் என்ற அடிப்படையில் பிரித்தானியாவுக்கும் உண்டு என மலையக அரசியல் அரங்கத்தின் செயலதிபரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலக் ராஜா வலியுறுத்தியுள்ளார்.

நுவரெலியா மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தாணிகருக்குக்கும் மலையக அரசியல் அரங்கத்தினருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (16/10/2026) நுவரெலியாவில் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து ஊடகங்களுக்கு அரங்கம் விடுத்திருக்கும் அறிக்கையிலேயே திலகர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

பிரித்தானியர்களால் இலங்கையில் பெருந்தோட்டப் பயிரச்செய்கைக்காக அழைத்துவரப்பட்ட இந்திய வம்சாவளியினரான மலையகத் தமிழர்கள் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் பெற்றுக் கொண்ட உரிமைகளை சுதந்திர இலங்கையில் இழக்கலாயினர்.

அதில் பிரதானமானது குடியுரிமைப் பறிப்பு. அதன் தொடர்ச்சி இந்தியாவுக்கு நாடுகடத்தலாகவும் அமைந்தது. அதனை அடுத்து பெரிய சவாலாக அமைந்து இருப்பது பிரித்தானியர் உருவாக்கிய பெருந்தோட்டக் கட்டமைப்பை மாற்றி சிறு தோட்ட உடமையாக்கும் நிலை மாற்றச் செயற்பாட்டில் மலையகத் தமிழர்கள் கடந்த 78 ஆண்டுகளாகவே புறக்கணிக்கப்படுவதாகும்.

இலங்கை அரசின் இந்தப் புறக்கணிப்பதானது இலங்கையில் அவர்களது வாழ்வாதாரத்தையும் இருப்பையும் பெரிதும் சவாலுக்கு உட்படுத்துவதாகும். இத்தகைய தொடர் பாரபட்சங்களை எதிர்கொண்டு தமது முயற்சியால் தமது கலை, இலக்கிய பண்பாட்டு அம்சங்களோடு மலையகத் தமிழ் எனும் மொழியையும், மலையகத் தமிழர் எனும் இனத்துவ அடையாளத்தையும் கட்டமைத்துள்ளனர்.

ஆனாலும் 2034 ஆம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பில் இந்தியத் தமிழர்/ மலையகத் தமிழர் எனும் பகுதி இல்லாமல் போகும் அபாயம் உள்ளது. இத்தகைய பின்னணியோடு பெருந்தோட்டத்துறையை இல்லாமல் அதற்கு பதிலாக சுற்றுலாத் துறையை அறிமுகம் செய்தல் போன்ற நடைமுறைகள் மக்களது இருப்பைக் கேள்விக்குள்ளாக்கி வருகிறது.

மலையகத்தின் பிரதான பிரச்சினை வீடு என்பதாக கூறப்பட்டாலும் உண்மையான பிரச்சினை காணி உரிமையை இலங்கை அரசு மறுப்பதாகும். வீடுகளை வழங்க இந்தியா போன்ற நாடுகள் நன்கொடை வழங்கி ஒரு தசாப்தம் கடந்தும் மலையகத் தமிழர்களுக்கு காணி உரிமை மறுக்கப்படுவதால் வீடுகளை அமைக்க முடியாமல் உள்ளது என்பது புரிந்து கொள்ளல் வேண்டும்.

இத்தகைய பின்னணியில் ஹட்டன் பிரகடனத்தை வழங்கி ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதில் காணி உரிமை வழங்குவதாக உறுதி அளித்துவிட்டு இப்போது காணி எங்கே இருக்கிறது என கேள்வி எழுப்புவது வியப்புக்குரியது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மலையகத் தமிழ் மக்கள் நோக்கி பத்து பாரபட்சங்கள் இடம்பெற்று இருப்பதையும் நாம் பட்டியலிட்டு பகிரங்கப்படுத்தி உள்ளோம்.

எனவே மலையகத் தமிழர்களை இலங்கைக்கு அழைத்து வந்தவர்கள் என்றவகையில் மலையகத் தமிழர்களை கௌரவமான பிரஜைகளாக நிலை கொள்ளச் செய்யும் கடப்பாடு பிரித்தானியாவுக்கும் உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் அரங்கத்தின் செயலதிபர் திலகருடன் விளையாட்டுத் துறை செயலாளர் சண்முகம் ரவிச்சந்திரனும் கலந்து கொண்டார்.

Related Articles

Latest Articles