இஸ்க்ரப் தோட்டத்தில் முச்சக்கர வண்டிகள் மூலம் குப்பை சேகரிக்கும் பணி ஆரம்பம்!

இஸ்க்ரப் தோட்டத்தில் முச்சக்கர வண்டிகள் மூலம் குப்பை சேகரிக்கும் பணி ஆரம்பம்!

நுவரெலியா மாநகர சபை உறுப்பினர் ராஜசுந்தரம் நலின்ராஜின் முயற்சியால் புதிய நடவடிக்கை – பொதுமக்கள் பாராட்டு!

நுவரெலியா மாநகர சபை எல்லைக்குட்பட்ட இஸ்க்ரப் தோட்டத்தில், லயன் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் குறுகிய பாதைகள் காரணமாகப் பாரிய குப்பை சேகரிப்பு வாகனங்கள் செல்ல முடியாத நிலை காணப்பட்டதையடுத்து, முச்சக்கர வண்டிகள் மூலம் குப்பைகளைச் சேகரிக்கும் பணி நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாநகர சபை உறுப்பினர் ராஜசுந்தரம் நலின்ராஜின் வேண்டுகோளுக்கு அமைய, இஸ்க்ரப் தோட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று குப்பைகளைச் சேகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், குறுகிய பாதைகளைக் கொண்ட லயன் குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்கு அருகிலேயே குப்பைகளைச் சேகரிப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் தமது வீடுகளில் சேகரமாகும் கழிவுகளை முறையாகப் பிரித்து, குப்பை சேகரிக்கும் முச்சக்கர வண்டிகளிடம் ஒப்படைக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.

மேலும், பொதுமக்கள் தமது கழிவுகளைப் பொது இடங்களிலும் வீதியோரங்களிலும் கண்ட இடங்களில் வீசுவதைத் தவிர்ப்பதற்கும், முறையான கழிவு முகாமைத்துவத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்க்ரப் தோட்டத்தின் சுற்றுச்சூழலைத் தூய்மையாகப் பேணுவதற்கும், பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையை அப்பகுதி மக்கள் வரவேற்றுள்ளனர்.

அத்துடன், பொதுமக்களின் அன்றாடத் தேவையைக் கருத்திற்கொண்டு இந்த வசதியை ஏற்படுத்துவதற்கு முயற்சி எடுத்த மாநகர சபை உறுப்பினர் ராஜசுந்தரம் நலின்ராஜுக்கும், இதனைச் செயல்படுத்துவதற்குப் பங்களித்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் குப்பைகளை சேகரிப்பதற்காக வருகை தந்த முச்சக்கர வண்டி சாரதி மற்றும் மாநகர சபை தொழிலாளி அவர்களுக்கும் தமது நன்றியையும் தெரிவித்துள்ளனர்.

கஜரூபன் திவ்யா
நுவரெலியா

Related Articles

Latest Articles