பெருந்தோட்ட உறவுகளுக்கு ஊதிய உயர்வை வழங்கினோம்: அரசியல் அலையால் அல்ல சமூக மாற்றத்துக்காகவே மலையக மக்களும் வாக்களிப்பு: பதுளையில் அனல் பறந்த அமைச்சர் சரோஜாவின் உரை
“கொட்டும் மழையிலும், சுட்டெரிக்கும் வெளியிலும் தொழில் செய்யும் எமது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என உறுதியளித்தோம். இதற்கமைய நாம் சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தோம்.
கடந்தகால ஆட்சியாளர்கள் 10 ரூபாகூட அதிகரிப்பு வழங்காத நிலையில் நாள் சம்பளமாக 1,750 ரூபாவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தோம்.”
இவ்வாறு அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட மகளிர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“இம்முறையும் 15 லட்சம் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணக் கொடுப்பனவாக 6000 ரூபா வழங்கப்படவுள்ளது.
நாம் எவரும் அரசியல் அலை காரணமாக வாக்கு அளிக்கவில்லை. எதிரணியில் இருப்பவர்கள் எப்படியான விமர்சனங்களை முன்வைத்தாலும், தனி நபர்களை இலக்கு வைத்து சேறு பூசினாலும் உண்மை என்னவென்பது மக்களுக்கு தெரியும். சமூக மாற்றத்துக்காகவே மக்கள் எமக்கு வாக்களித்தனர்.
எமக்கு தனிப்பட்ட ரீதியில் இழப்பதற்கு எதுவும் இல்லை. நாட்டை மீட்பதற்காகவே பொறுப்பை ஏற்றோம். அந்த பயணத்தில் தற்போது ஈடுபட்டுவருகின்றோம். ஈராண்டுகாலமாக கூட்டு பொறுப்புடனேயே நாம் செயல்படுகின்றோம். “ – எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.










