பொகவந்தலாவை – கெர்கஸ்வோல்ட் மத்திய பிரிவில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்தனர் எனக் கூறப்படும் இருவர் ஹட்டன் பொலிஸாரால் இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவர் ஆலய பரிபாலனசபைத் தலைவர் (கோவில் தர்மகர்த்தா) என தெரியவருகின்றது.
இந்நிலையில், பௌர்ணமி போயா தினத்தில் கெர்கஸ்வோல்ட் பகுதியில் அவர் மதுபானங்களை விற்பனை செய்து வருவதாக ஹட்டன் பொலிஸாருக்கு இரகசியத் தகவலொன்று கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, சிவில் உடையில் கெர்கஸ்வோல்ட் பகுதிக்குச் சென்ற பொலிஸார், பௌர்ணமி போயா தினத்தில் கள் போத்தல்களுடன் நடமாடிய நபர் ஒருவரை மடக்கிப்பிடித்தனர்.
அவரிடம் முன்னெடுத்த விசாரணைகளின்போது, பூட்டியிருந்த அவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 55 கள் போத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சந்தேகநபரிடம் முன்னெடுத்த மேலதிக விசாரணைகளின்போது, கோவில் தர்மகர்த்தாவே தனது வீட்டில் கள் போத்தல்களைப் பதுக்கி வைத்திருப்பதாக அவர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து தர்மகர்த்தாவும் கைது செய்யப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
கைது செய்யப்பட்டுள்ள இரு சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகரவின் நேரடி அறிவுறுத்தலுக்கு அமைய, பொலிஸ் உப பரிசோதகர் சம்பத், பொலிஸ் சார்ஜன்ட் கபில (10810), பொலிஸ் கான்ஸ்டபிள்களான நிஷங்க (34968), மதுரங்க (107574) ஆகியோர் இந்த விசேட கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.










