2009 மே 17 ஆம் திகதிகூட புலிகளுடன் பேச்சு நடத்தியது ராஜபக்ச குடும்பம் – பொன்சேகா பகீர் தகவல்  

 
 

“2009 மே 17ஆம் திகதியும் புலிகளுடன் ராஜபக்ச குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நடவடிக்கைக்குப் பின்னர், ராஜபக்சக்களின் முகத்தைப் பார்த்துப் பேசுவதில்லை. இந்தப் பிரச்சினை இன்றும் நீடிக்கிறது” என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றிய அவர், இது தொடர்பில் மேலும் கூறியதாவது:

“நாம் 30 வருடங்கள் போர் செய்தோம். நான்காவது ஈழப்போருக்கு முன்னர் நாம் என்ன செய்தோம் என்பது படையினருக்குத் தெரியும். அப்போது தூரநோக்குச் சிந்தனை இருக்கவில்லை.

வடக்கில் தாக்குதல் நடத்தச் செல்ல வேண்டுமெனில், கிழக்கிலிருந்து படையினர் அழைத்துச் செல்லப்படுவார்கள். பின்னர், தாக்குதல் இடைநடுவில் நிறுத்தப்படும்.

நான் இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்ற பின்னரே, பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க வேண்டும் என்ற தூரநோக்குச் சிந்தனையின் அடிப்படையில் வியூகங்கள் வகுக்கப்பட்டன.

இறுதிப்போரின்போதும் எனது காலை வாருவதற்கு அரசியல்வாதிகள் முயன்றனர். பயங்கரவாதிகளை 10 கிலோமீற்றர் பரப்பளவுக்குள் முடக்கி வைத்திருந்தபோது, 2009 ஜனவரி 31ஆம் திகதி முதல் பெப்ரவரி 1ஆம் திகதி வரை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, புலிகள் தாக்குதல் நடத்தினர். எமது பாதுகாப்பு வலயம் சீர்குலைந்தது.

அடுத்ததாக, பயங்கரவாதிகளை 400 மீற்றருக்குள் முடக்கி வைத்திருந்தபோதும், மே 17ஆம் திகதி ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த மஹிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் புலிகளுடன் சரணடைவது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நாட்டு மக்கள் பாற்சோறு சாப்பிடத் தயாராக இருந்த வேளையில், ராஜபக்ச குடும்பத்தினர் புலிகளைச் சரணடையச் செய்து, அதன் மூலம் பிரசாரம் செய்து தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு முயன்றனர். இப்படிப்பட்டவர்களுடன்தான் நாம் பணியாற்ற வேண்டியிருந்தது.

இறுதிக்கட்டப் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்குப் பின்னரே, ராஜபக்ச குடும்பத்தினரின் முகத்தைப் பார்த்துப் பேசுவதை நிறுத்தினேன்” என்றார் சரத் பொன்சேகா.

……………..
 
நாட்டில் பல பகுதிகளில் அடை மழை: மலையகத்தில் மண்சரிவு அபாய எச்சரிக்கை
 
வங்காள விரிகுடாவின் கிழக்கு, மத்திய மற்றும் தென்கிழக்கு கடற்பரப்புகளில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழமுக்கம், தற்போது ஆழ்ந்த தாழமுக்கமாக வலுவடைந்துள்ளது.
 
இதனால் நாட்டின் பல பகுதிகளில் நிலவும் மழைடனான வானிலை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கமைய, மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களுக்கும், அனுராதபுரம் மாவட்டத்திலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
 
வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழமுக்கம், இன்று (26) புயலாக வலுவடையக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
 
வடக்கு, மேல், சப்ரகமுவ, தென், வடமேல், மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் குறித்த பகுதிகளின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவிலான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாகவும் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே, நேற்று (25) காலை 8.30 மணிமுதல் இன்று (26) அதிகாலை 3.00 மணி வரையான காலப்பகுதிக்குள் கிளிநொச்சி – பூநகரி பகுதியில் அதிக்கூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அங்கு 163 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அத்துடன் மன்னார் மாவட்டத்தின் இலுப்பை கடவை பகுதியில் 148 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தின் தொல்புரம் பகுதியில் 110 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அத்துடன் மீசாலையில் 101 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

தொடரும் சீரற்ற வானிலையினால் களு கங்கையின் நீர்மட்டம் மில்லகந்த மற்றும் மகுர ஆகிய பகுதிகளில் எச்சரிக்கை மட்டத்திலுள்ளதாக ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

சீரற்ற வானிலையினால் 5 மாவட்டங்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

…………………

அஹங்கமவில் பேருந்து – டிப்பர் மோதல் மோதி விபத்து: ஐவர் காயம்

காலி – மாத்தறை பிரதான வீதியில் அஹங்கம பகுதியில் இன்று (26) காலை இடம்பெற்ற பேருந்து மற்றும் டிப்பர் மோதலில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

அஹங்கம பொலிஸாரின் தகவலின்படி, இன்று காலை சுமார் 7.30 மணியளவில் காலியிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த பேருந்து, எதிர்திசையில் வந்த டிப்பருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள், பொலிஸார் மற்றும் பிரதேச மக்களின் உதவியுடன் சுவசெரிய அம்புலன்ஸ் வண்டிகளில் காலி தேசிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து காரணமாக காலி – மாத்தறை பிரதான வீதியில் கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் அஹங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

……………

பிரேசில் ஜனாதிபதிக்கு அநுர வாழ்த்து  

பிரேசில் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் நான்காவது தடவையாகவும் அந்நாட்டின் ஜனாதிபதியாக லூலா டா சில்வா தெரிவாகியுள்ளார்.

தேர்தல் வெற்றி குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, இந்த வெற்றி பிரேசில் மக்கள் பெற்றுக்கொண்ட சாதாரண வெற்றியல்லயென தெரிவித்துள்ளார்.

ஊழல், பிரிவினை மற்றும் அரசியல் பொய்களை தோற்கடித்த ஒன்றாகவே இந்த வெற்றி பார்க்கப்படுகிறது. பிரேசிலின் ஜனாதிபதியாக மீண்டும் லூலா டா சில்வா வெற்றிபெற்றுள்ளமை, அந்நாட்டு மக்களை அரசியல் பொய்கள் மற்றும் வங்குரோத்து அடையும் நாடு என குறிப்பிட்டு ஏமாற்ற முடியாதென்மை உறுதி செய்துள்ளது.

மீண்டுமொரு முறை தேர்தலில் வெற்றிபெற்றுள்ள பிரேசில் ஜனாதிபதிக்கு தனது அரசியல் பயணத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச செல்ல வாழ்த்துவதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.

………………

எகிறியது மரக்கறி விலை

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக மரக்கறிகளின் விலை உயர்வடைந்துள்ளது. கடந்த வாரத்தில் 350 முதல் 400 ரூபா வரை கொள்வனவு செய்யப்பட்ட தக்காளி ஒரு கிலோவின் தற்போதைய விலை 600 ரூபா முதல் 650 ரூபா வரை அதிகரித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக 250 ரூபாவிற்கு காணப்பட்ட ஒரு கிலோ குடை மிளகாய் 400 முதல் 450 ரூபாவிற்கு விற்பனையாகிறது. இதேவேளை 150 ரூபாவிற்கு காணப்பட்ட கோவா ஒரு கிலோவின் விலை தற்போது 350 ரூபா வரை அதிகரித்துள்ளது. மனிங் பொதுச் சந்தையில் இந்த விலை அதிகரிப்பு காணப்படுகிறது.

இதேவேளை கோழி இறைச்சி மற்றும் முட்டை கொள்வனவு 20 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை கோழி இறைச்சி வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

முட்டை ஒன்றின் உற்பத்திச் செலவு 30 முதல் 32 ரூபாவாக உள்ளது. எனினும் பண்ணைகளிலிருந்து சந்தைக்கு முட்டை விநியோகமானது குறித்த விலைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதால் உற்பத்தியாளர்களுக்கு இலாபமீட்ட முடியாத சூழல் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

……………

ஒக்டேன் 95 பெற்றோல் விலை 20 ரூபாவால் அதிகரிப்பு: IOC, சினோபெக் அறிவிப்பு

இலங்கையில் லங்கா IOC மற்றும் சினோபெக் நிறுவனங்கள் ஒக்டேன் 95 பெற்றோலின் விலையை லீற்றருக்கு 20 ரூபாவால் அதிகரித்துள்ளன.

இந்த விலைத் திருத்தம் ஒக்டோபர் 25ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, முன்னதாக 475 ரூபாவாகக் காணப்பட்ட ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றரின் விலை, தற்போது 495 ரூபாவாக அதிகரித்துள்ளது.

லங்கா IOC மற்றும் சினோபெக் ஆகிய இரு நிறுவனங்களின் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் இந்த விலை அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

……………

இரட்டை கொலை: பதுளையை சேர்ந்த துப்பாக்கிதாரி கைது!

களுத்துறை, நாகொட பகுதியில் உணவக உரிமையாளர் மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடுவலை, ரணால பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்தபோதே குறித்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 9ஆம் திகதி காலை நாகொட பகுதியிலுள்ள உணவகத்திற்கு முன்னால் மேற்கொள்ளப்பட்ட இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், 54 வயதான உணவக உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காயமடைந்த அவரது மனைவி பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றிருந்த நிலையில், பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியிருந்தனர்.

தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகள் மற்றும் சிசிடிவி (CCTV) காணொளிகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில், பிரதான துப்பாக்கிதாரி கடுவலை பகுதியில் ஒளிந்திருப்பதை களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவினர் கண்டறிந்தனர் .

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ‘திப்பிட்டிகொட சக்தி’ என்பவரின் உறவினர் வீட்டில் மறைந்திருந்த 32 வயதான பதுளை பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

‘களுத்துறை நவீன்’ என்பவரின் ஒப்பந்தத்துக்கு அமைவாகவே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இந்தச் சம்பவத்துக்கு குப் பயன்படுத்தப்பட்ட T-56 ரக துப்பாக்கி வேறொரு நபரால் இவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டின் பின்னர் அந்தத் துப்பாக்கி தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட பரிமாற்றத்திற்கு அருகில் வைத்து பிறிதொரு நபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

……………

வடக்கில் கடல்சார் சுற்றுலா
சர்வதேச ஈர்ப்பை உருவாக்கும்- ஆளுநர் வேதநாயகன் புகழாரம்

வடக்கு மாகாணத்தின் கடல்சார் வளங்களைச் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தும் புதிய முயற்சிகள், சர்வதேச அளவில் வடக்கு மாகாணத்தை நோக்கிச் சுற்றுலாவிகளை ஈர்ப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

‘எல்லாளன் டூரிஸம்’ நிறுவனத்தின் கோரிக்கைக்கு அமைவாக, யாழ்ப்பாணக் குடாக்கடலின் இயற்கை அழகை இரசிப்பதற்கும் பல்வேறு கடல்சார் விளையாட்டுச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குமான விசேட படகுச் சுற்றுலா நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில் இதுவரை முழுமையாகப் பயன்படுத்தப்படாத கடல்சார் வளங்களைச் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகளை நடைமுறையில் வெளிப்படுத்தி வரும் எல்லாளன் டூரிஸம் நிறுவனம், தனது சேவைகளை விரிவுபடுத்துவதற்கான கோரிக்கையையும் முன்வைத்துள்ளது. இம்முயற்சிகளை நேரடியாக அனுபவித்து ஆராயும் நோக்கில், ஆளுநர், பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் சுற்றுலாப் பணியகப் பணிப்பாளர் ஆகியோர் பங்கேற்கும் வகையில் இந்த முன்னோடிப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சுற்றுலா அனுபவத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் கருத்துத் தெரிவித்த ஆளுநர், இது முற்றிலும் புதிய அனுபவமாக அமைந்தது என்று குறிப்பிட்டார். கடல்சார்ந்த பிரதேசத்தில் வாழ்ந்தாலும், இவ்வாறான அனுபவத்தை இதுவரை பெற்றிருக்கவில்லை என்று தெரிவித்த அவர், இத்தகைய முயற்சிகள் வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறைக்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.

இதுவரை வடக்கு மாகாணத்தின் சுற்றுலா என்பது பெரும்பாலும் சுற்றுலாத்தலங்களைப் பார்வையிடுவதுடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்ததாகச் சுட்டிக்காட்டிய ஆளுநர், சுற்றுலாவிகளைக் கவர்வதற்கு அதற்கு அப்பால் பல்வேறு சுற்றுலாசார் செயற்பாடுகளை உருவாக்குவது அவசியம் என்றும் தெரிவித்தார்.

இவ்வாறான அனுபவங்களைப் பெற்றுக்கொண்டு அவற்றை ஏனையவர்களுடனும் பகிர்ந்துகொள்வதன் மூலம், மேலும் பலரை வடக்கு மாகாணத்தின் கடல்சார் சுற்றுலா முயற்சிகளை நாடி வரத் தூண்ட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், வடக்கு மாகாணத்தில் சுற்றுலாசார் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கான முதலீட்டு வாய்ப்புகள் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பி வருவது மகிழ்ச்சியளிக்கின்றது என்று தெரிவித்த ஆளுநர், எமது மண்ணைச் சேர்ந்தவர்கள் இவ்வாறான முயற்சிகளைத் திறம்பட முன்னெடுத்து வருவது பாராட்டுக்குரியது என்றும் கூறினார்.

எல்லாளன் டூரிஸம் நிறுவனம், யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய மீன்பிடித் தொழிலைத் தனித்துவமான சுற்றுலா அனுபவமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. பாரம்பரிய மீன்பிடி அனுபவம், கடலட்டை வளர்ப்புப் பண்ணையைப் பார்வையிடுதல், பனானா படகுச் சவாரி, கடல்வாழ் உயிரினங்களை அவதானித்தல் மற்றும் கடல் சூழலில் உணவு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு அனுபவங்களைச் சுற்றுலாவிகளுக்கு வழங்கி வருகின்றது.

இம்முயற்சிகளின் ஊடாக உள்ளூர் மீனவ சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, வடக்கு மாகாணத்தின் கடல்சார் வளங்களைப் பொறுப்புடனும் நிலையான முறையிலும் பயன்படுத்தி, சுற்றுலாத்துறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதே தமது நோக்கம் என்று நிறுவனப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இந்தச் சுற்றுலாப் பயணத்தில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி, கல்வி மற்றும் மகளிர் விவகார அமைச்சுக்களின் செயலாளர்கள், வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles