அரசின் புதிய சட்டங்களால் ஜி.எஸ்.பி. பிளஸ்
வரிச்சலுகையை இலங்கை இழக்கும் அபாயம்

அரசால் அவசர அவசரமாகக் கொண்டுவரப்படும் ‘பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டமூலம்’ காரணமாக, ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கி வரும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நாடு முற்றாக இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் சுட்டிக்காட்டினார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்தக் கடுமையான எச்சரிக்கையை விடுத்தார்.
ஊடக சந்திப்பில் தொடர்ந்து உரையாற்றிய சீலரத்ன தேரர்,
“தற்போதைய அரசு மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதிலும் அவர்களின் பொருளாதாரத் துன்பங்களைப் புரிந்துகொண்டு உதவுவதிலும் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அவசர அவசரமாகப் பல்வேறு அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவருவதிலேயே கண்ணும் கருத்துமாக உள்ளது.
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் காரணமாக இலங்கைக்குக் கிடைக்கும் ஜி.எஸ்.பி. வரிச்சலுகை இல்லாது போனால் நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது? ஏற்கனவே வரிகளால் பீடிக்கப்பட்டுள்ள மக்கள் மீது ஜி.எஸ்.பி. இழப்பும் விழுந்தால், நாட்டின் ஏற்றுமதித் துறைக்கும் பொருளாதாரத்திற்கும் ஏற்படும் பேரழிவிற்கு யார் பொறுப்பேற்பது? அரசு தனது குறைகளை மறைப்பதற்காகவே இவ்வாறான சட்டங்களைக் கொண்டுவருகிறதா என்ற கேள்வி எழுகின்றது.” – என்றார்.
புதிய சட்டங்கள் மூலம் இளைஞர்களின் தனிப்பட்ட சுதந்திரம் பறிக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர்,
“இவ்வாறான கட்டுப்பாட்டுச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்போது இளைஞர்களின் தனிப்பட்ட சுதந்திரம் கடுமையாகப் பாதிக்கப்படும். இளைஞர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப ஆடை அணிவது, தலைமுடியை அலங்கரிப்பது, இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பது மற்றும் நடனமாடுவது போன்ற இயல்பான கலைச் செயற்பாடுகள் கூடக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது.
ஹோமாகம பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் உயிரிழந்த சம்பவத்தை இதனுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும். இந்தப் புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வராத நிலையிலேயே, பொலிஸ் காவலில் எலும்புகள் முறியும் அளவுக்குத் தாக்குதல் நடத்தப்பட்டு இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். யாருடைய உத்தரவின் பேரில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
ஒருவர் குற்றவாளியா அல்லது நிரபராதியா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது. எனவே, நாட்டின் பொருளாதாரத்தையும் ஜனநாயகத்தையும் பாதிக்கும் இப் புதிய சட்டமூலத்தை அவசரமாகக் கொண்டுவராமல், நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று உடனடியாக நிறுத்த வேண்டும்.” – என்று கேட்டுக்கொண்டார்.
………………
செம்மணிப் புதைகுழி குறித்த விசாரணைக்கு அனைத்துலக உதவியைப் பெற வேண்டும்

யாழ்ப்பாணம், செம்மணி கூட்டுப் புதைகுழி குறித்து சுதந்திரமான மற்றும் நம்பகமான விசாரணையை உறுதிப்படுத்த சர்வதேச உதவியைப் பெற வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா,
நீதியை உறுதிப்படுத்தவும் மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகள் குறித்து சிறிலங்கா அரசாங்கத்திற்குப் பரிந்துரைகளை வழங்க முடியும்.
ஆனால் அந்தப் பரிந்துரைகளைச் செயல்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்தையே சாரும்.
இது போன்ற விவகாரங்களில் உள்ள சிக்கல்களைக் கண்டறிந்து, மனித உரிமைகள் கண்ணோட்டத்தில் மக்களுக்கு அதிகபட்ச நீதியை உறுதிப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு வழங்குவதே எங்களது பணியாகும்.நாங்கள் அதைச் செய்கிறோம்.
செம்மணிப் புதைகுழி விவகாரத்தைப் பொறுத்தவரை, சிறிலங்காஅரசாங்கம் அனைத்துலக உதவியைப் பெற வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைத்துள்ளோம்.
இந்தப் பரிந்துரைகளைச் செயல்படுத்த வேண்டிய பொறுப்பை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்.” என்றும், இலங்கைமனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவ தெரிவித்துள்ளார்.
……………….
போலியான பேயைக் காட்டிப் பீதியைத் கிளப்பும் எதிர்க்கட்சிகள்

அரசால் கொண்டுவரப்படவுள்ள ‘பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்’ எந்தவொரு வகையிலும் அடக்குமுறைக்காகக் கொண்டுவரப்படவில்லை எனவும், குறுகிய அரசியல் இலாபங்களுக்காகவே எதிர்க்கட்சியினர் இது குறித்துப் போலியான அச்சத்தைப் பரப்பி வருகின்றனர் எனவும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் விசேட மருத்துவர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஊடகச் சந்திப்பில் தொடர்ந்து உரையாற்றிய பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன,
“நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்குப் பதிலாக, குறுகிய நோக்கங்களுக்காகத் தங்களது அரசியலை நகர்த்துவோர் எப்போதும் போலியான பேய்களைக் காட்டி நாட்டில் நெருக்கடிகளை உருவாக்கவே முயற்சிக்கின்றனர். தற்போது அவர்கள் ‘பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ என்ற விடயத்தைக் கையில் எடுத்துப் பிரச்சாரம் செய்கின்றனர்.
தேசியவாதத்திலோ அல்லது ஏதேனும் ஒரு சட்டத்திலோ தொற்றிக்கொள்ளும் இவர்கள், அதற்கும் வழியில்லை என்றால் நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைக் கொண்டுவந்தாவது அரசாங்கத்தின் மக்கள் சேவைப் பயணத்தைப் பின்னோக்கி இழுக்க முயற்சிக்கின்றனர்.
22 ஆவது அரசமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்டபோதும் எவ்வாறெல்லாம் பீதியைக் கிளப்பினார்கள்? ஆனால், இன்று அதைப் பற்றி எந்தச் சத்தமும் இல்லை. இப்போதும் அதேபோன்றதொரு நாடகத்தையே எதிர்க்கட்சிகள் அரங்கேற்றுகின்றன.” – என்றார்.
அரசின் சர்வதேச அங்கீகாரங்கள் குறித்து மேலும் விளக்கமளித்த அவர்,
“நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஊடகங்களை அடக்குவோம், பெரஹரா நடத்துவதை நிறுத்துவோம் எனப் பல்வேறு பொய்ப் பிரசாரங்களை முன்வைத்தனர். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் சர்வதேச தரவரிசைகளின்படி இலங்கை ஊடகச் சுதந்திரத்தில் முன்பு இருந்ததை விடவும் சிறந்த நிலைக்கு முன்னேறியுள்ளது.
பாலின சமத்துவம், சமூக நீதி என சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அனைத்து அளவுகோல்களிலும் எமது நாடு உயரிய இடத்தைப் பிடித்துள்ளது. பழைய அரசியல் முறையுடன் ஒப்பிடும்போது ஊடகங்கள் தொடர்பில் நாங்கள் எவ்வளவு ஜனநாயகமாகச் செயற்பட்டோம் என்பதை ஊடகவியலாளர்கள் நன்கு அறிவர்.
இதுவொரு மக்கள் ஆதரவு பெற்ற அரசாகும். எமது மக்கள் ஆணையின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான அத்தனை நடவடிக்கைகளையும் எடுப்பதில் நாங்கள் எந்தவிதத்திலும் பின்வாங்கப் போவதில்லை.” – என்றார்.
……………
இன்று நள்ளிரவு முதல் பாண் உள்ளிட்ட பேக்கரி உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு!

450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாண் மற்றும் சிற்றுண்டி வகைகள் உள்ளிட்ட ஏனைய பேக்கரி உணவுப் பொருட்களின் விலைகள் இன்று (ஒக்டோபர் 30) நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சங்கத்தின் நிறைவேற்றுக் குழு மேற்கொண்ட தீர்மானத்துக்கு அமைய, ரத்தொலுகமவில் அமைந்துள்ள சங்கத்தின் தலைமையகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கோதுமை மாவை விற்பனை செய்யும் நிறுவனங்கள், கடந்த ஒக்டோபர் 20ஆம் திகதி நள்ளிரவு முதல் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 13 ரூபாவால் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் பதில் பணிப்பாளர் நாயகம் சமந்த கருணாரத்னவின் கவனத்துக்குக் கொண்டு சென்றபோது, அதிகார சபைக்கு அறிவிக்காமல் கோதுமை மாவின் விலையை அதிகரித்தமை முறையற்ற செயல் என அவர் சுட்டிக்காட்டியதாகவும் ஜயவர்தன தெரிவித்தார்.
அத்துடன், வெளிநாட்டில் உள்ள வர்த்தக அமைச்சரின் நாடு திரும்பும் வரை பேக்கரி உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டாம் என பேக்கரி உரிமையாளர்களிடம் பதில் பணிப்பாளர் நாயகம் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் அவர் கூறினார்.
எனினும், கோதுமை மாவின் விலை அதிகரிப்புக்கு ஏற்ப பேக்கரி உணவுப் பொருட்களின் விலைகளையும் அதிகரிக்க வேண்டுமென நாடளாவிய ரீதியிலுள்ள பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்துக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வந்ததாக அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் கோரிக்கைக்கு மதிப்பளித்து 10 நாட்களாக விலை அதிகரிப்பைத் தவிர்த்ததாகவும், இந்தக் காலப்பகுதியில் வர்த்தக அமைச்சரும் இவ்விடயம் தொடர்பான கலந்துரையாடல்களில் பங்கேற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர் மற்றும் சாதகமற்ற சர்வதேச அரசியல் சூழ்நிலை காரணமாக, கோதுமை மாவின் விலை குறையும் என எதிர்பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஜயவர்தன சுட்டிக்காட்டினார்.
இதனைக் கருத்திற்கொண்டு, வேறு வழியின்றி 450 கிராம் பாண் மற்றும் சிற்றுண்டி வகைகள் உள்ளிட்ட ஏனைய பேக்கரி உணவுப் பொருட்களின் விலைகளை 5 ரூபாவால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த விலை அதிகரிப்பு இன்று (ஒக்டோபர் 30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
……………….
மூன்று மாதங்களாக LAUGFS எரிவாயுத் தட்டுப்பாடு; சட்ட நடவடிக்கை எடுக்க நுகர்வோர் அதிகார சபை ஆலோசனை!

இலங்கையில் கடந்த மூன்று மாதங்களாக நிலவும் LAUGFS எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பில், அந்நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து நுகர்வோர் விவகார அதிகார சபை ஆலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதியளவு எரிவாயு சிலிண்டர்களைச் சந்தைக்கு விநியோகிக்குமாறு நிறுவனத்துக்கு பலமுறை அறிவுறுத்தப்பட்ட போதிலும், கப்பல்களின் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக நிறுவனம் பதிலளித்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், LAUGFS எரிவாயுத் தட்டுப்பாடு காரணமாக Litro Gas நிறுவனத்துக்கான நாளாந்தத் தேவை 1,100 மெட்ரிக் தொன்னிலிருந்து 1,600 மெட்ரிக் தொன்னாக அதிகரித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அதிகரித்த தேவையைச் சமாளிக்க Litro நிறுவனம் தனது நாளாந்த சிலிண்டர் விநியோகத்தை 74,000 இலிருந்து 90,000 முதல் 100,000 வரை அதிகரித்துள்ளது.
மேலும், 3,000 மெட்ரிக் தொன் Litro எரிவாயுவை ஏற்றிவந்த கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளதுடன், 3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் ஒக்டோபர் 31ஆம் திகதி நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், LAUGFS எரிவாயு சிலிண்டர்களைப் பயன்படுத்தும் நுகர்வோர், அவற்றுக்குப் பதிலாக Litro சிலிண்டர்களை உடனடியாகப் பயன்படுத்த முடியாததால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே, LAUGFS எரிவாயு சிலிண்டர்களின் வழமையான விநியோகத்தை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
……………..
அரசாங்கத்தின் ஊடாக மட்டுமே இஸ்ரேல் வேலைவாய்ப்புகள்

இஸ்ரேல் அரசாங்கம் எடுத்துள்ள புதிய கொள்கைத் தீர்மானத்தின்படி, 2027 ஜனவரி 1ஆம் திகதி முதல் இலங்கைத் தொழிலாளர்களை இஸ்ரேலில் வேலைவாய்ப்புகளுக்கு இணைத்துக்கொள்வது அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் (Government- to- Government – G to G) கீழ் மட்டுமே மேற்கொள்ளப்படும் என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்கு அறிவித்துள்ளது
இதற்கமைய, உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் ஊடாக தற்போது முன்னெடுக்கப்படும் இஸ்ரேல் வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்புத் திட்டம் 2026 டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடையும். 2027ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய ஆட்சேர்ப்பு முறை, ஆட்சேர்ப்பு வரம்புகள் மற்றும் தெரிவு நடைமுறைகள் தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர், இஸ்ரேலில் கட்டுமானம் (Construction), கைத்தொழில் (Industrial), வர்த்தகம் மற்றும் சேவைகள் (Commerce & Services) ஆகிய துறைகளில் வேலைவாய்ப்புகளுக்காகத் தனியார் துறையின் கீழ், அதாவது உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் ஊடாகத் தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
எனினும், மேற்படி துறைகளிலோ அல்லது வேறு எந்தத் துறையிலோ இஸ்ரேலில் புதிய வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தருவதாகத் தனியார் தரப்பினர் வழங்கும் வாக்குறுதிகள் தொடர்பில் வேலைவாய்ப்பை எதிர்பார்ப்போர் விழிப்புடன் இருக்க வேண்டும் எனப் பணியகம் அறிவுறுத்தியுள்ளது.
இஸ்ரேல் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தருவதாகக் கூறும் எந்தவொரு நபருக்கும் அல்லது உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்துக்கும் பணம் செலுத்துவதைத் தவிர்க்குமாறு பணியகம் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், பணியகத்தினால் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் வரை, தனியார் துறையினரால் இஸ்ரேல் வேலைவாய்ப்புகளுக்காக நடத்தப்படும் திறன் பரிசோதனைகள், நேர்முகத் தேர்வுகள் அல்லது ஏனைய தெரிவுச் செயல்முறைகளில் பங்கேற்பதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஆகியன வெளியிடும் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை மட்டுமே பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதுஏற்கனவே இஸ்ரேல் வேலைவாய்ப்புகளுக்காகச் சட்டபூர்வமாகப் பணம் செலுத்தியவர்கள் இது தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை. அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிவுறுத்தல்கள் உரிய நேரத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனப் பணியகம் தெரிவித்துள்ளது.
சட்டபூர்வமாகப் பணம் செலுத்தியவர்களின் விபரங்களை உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களிடமிருந்து பணியகம் கோரியுள்ளது. அந்த விபரங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
……………..
மக்கள் போராட்டங்களுக்கு அஞ்சியே பயங்கரமான சட்டங்களை கொண்டுவருகினறது என்.பி.பி.

“கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதைப் போன்று, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராகவும் மக்கள் கிளர்ந்தெழக்கூடும். அதனால்தான் மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் வகையில், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:
“அரசாங்கத்தின் நிர்வாக அணுகுமுறை தோல்வியடைந்துள்ளது. நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. எந்நேரத்திலும் இந்த அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கிப் போராடக்கூடும்.
கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதைப் போன்று, மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடக்கூடிய சூழல் உருவாகி வருகின்றது. இது தொடர்பான புலனாய்வுத் தகவல்களை அரசாங்கம் அறிந்திருக்கக்கூடும்.
அதனால்தான் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் அவசரமாகக் கொண்டுவரப்பட்டுள்ளது. மக்கள் போராட்டங்களுக்குத் தலைமை தாங்குபவர்களைக் கைது செய்து, அரசாங்கத்துக்கு எதிராக எழும் எதிர்ப்புகளை ஒடுக்குவதே இதன் நோக்கமாகும்” என்றார்.










