ஆதரவற்ற இளைஞரின் திருமணத்தில் குவிந்த 10 ஆயிரம் பேர்! சீனாவில் நெகிழ்ச்சியூட்டிய மனிதநேயம்

சீனாவில் ஆதரவற்ற நிலையில் வளர்ந்த இளைஞர் ஒருவரின் திருமணத்தில் பங்கேற்பதற்காக, சுமார் 10 ஆயிரம் பேர் திரண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் யுன்னான் மாகாணம், யிலியாங் மாவட்டம், யுன்பெங் கிராமத்தைச் சேர்ந்த ஜியாவோ ஸு (24) என்ற இளைஞரின் திருமணமே இவ்வாறு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஜியாவோ ஸு தனது மூன்று வயதில் தந்தையை இழந்தார். அதற்குப் பின்னர் இரண்டு ஆண்டுகளில் அவரது தாய் மறுமணம் செய்துகொண்டு அவரைப் பிரிந்து சென்றார். இதையடுத்து, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த அவருக்கு, ஏழு வயதில் அந்த ஆதரவும் இல்லாமல் போனது.

பின்னர் தூரத்து உறவினர்களின் உதவியுடன் வளர்ந்த அவர், வறுமை காரணமாக ஆரம்பக் கல்வியைக்கூட நிறைவு செய்ய முடியவில்லை. சிறுவயதிலிருந்தே வாழ்வாதாரத்துக்காகக் கூலி வேலைகளில் ஈடுபட்டார். கட்டுமானத் தொழில், வாகன ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு வேலைகளைச் செய்து படிப்படியாகப் பணம் சேமித்தார்.

தனது உழைப்பின் மூலம் சுமார் 23 இலட்சம் ரூபாவைச் சேமித்துள்ள அவர், தான் விரும்பிய பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளத் தீர்மானித்தார்.

இந்நிலையில், தாய், தந்தை மற்றும் நெருங்கிய உறவினர்கள் என எவரது ஆதரவும் இல்லாத அவர், அண்மையில் சமூக வலைதளத்தில் காணொளி ஒன்றைப் பதிவிட்டார்.

அதில், “எனக்கு யாருமே இல்லை. தாய், தந்தை, உறவினர்கள் என எவரது ஆதரவும் இன்றி, உணவுக்குக்கூட வழியில்லாத நிலையில் கஷ்டப்பட்டு வளர்ந்தேன். கிடைத்த கூலி வேலைகளைச் செய்து ஓரளவு பணம் சேமித்துள்ளேன். ஒக்டோபர் 31ஆம் திகதி எனக்குத் திருமணம் நடைபெறவுள்ளது. சொந்தம், பந்தம் என்று யாரும் இல்லாத எனது திருமணத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் கலந்துகொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று உருக்கமாக அழைப்பு விடுத்திருந்தார்.

அவரது வேண்டுகோள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, சீனாவின் பல்வேறு தொலைதூரப் பகுதிகளிலிருந்தும் சுமார் 10 ஆயிரம் பேர் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக யுன்பெங் கிராமத்துக்கு வருகை தந்தனர்.

அங்கு வந்தவர்கள் விலையுயர்ந்த பரிசுப் பொருட்களைக் கொண்டு வந்ததுடன், திருமண விருந்துக்குத் தேவையான மளிகைப் பொருட்களையும் வழங்கினர். மேலும், சிலர் ஆடு, மாடு, பன்றி உள்ளிட்ட கால்நடைகளையும் உணவு தயாரிப்புக்காகக் கொண்டு வந்தனர்.

சுமார் 50-க்கும் மேற்பட்ட சமையல்காரர்கள் எவ்விதக் கட்டணமும் இன்றி திருமண விருந்துக்கான உணவு வகைகளைத் தயாரித்துக் கொடுத்தனர். திருமண ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான ஆடம்பரக் கார்களும் அணிவகுத்தன.

இவ்வாறு ஆடல், பாடல் மற்றும் மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களுக்கு மத்தியில், ஜியாவோ ஸுவின் திருமணம் கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி வெகு விமரிசையாக நடைபெற்றது. ஒட்டுமொத்த யுன்பெங் கிராமமும் விழாக்கோலம் பூண்டிருந்தது.

இந்த நெகிழ்ச்சியான நிகழ்வின் காணொளிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கணியன் பூங்குன்றனாரின் உலகளாவிய மனிதநேயக் கருத்தை நினைவூட்டும் வகையில், உறவுகளின் ஆதரவின்றி வளர்ந்த இளைஞரின் திருமணத்தில் ஆயிரக்கணக்கானோர் ஒன்றிணைந்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles