இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் பவன் ரத்நாயக்க, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) ஆண்களுக்கான ஒருநாள் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் 20 இடங்கள் முன்னேறி 16ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
அண்மைய போட்டிகளில் அவர் வெளிப்படுத்திய சிறப்பான துடுப்பாட்ட ஆட்டமே இந்த முன்னேற்றத்துக்குக் காரணமாக அமைந்துள்ளது.
லாகூரில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 77 ஓட்டங்களைக் குவித்திருந்தார். இதற்கு முன்னர் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 118 ஓட்டங்களையும் பெற்று அசத்தியிருந்தார்.
இதன் மூலம் உலகின் முதல் 20 ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்குள் பவன் ரத்நாயக்க இடம்பிடித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 132 பந்துகளில் 167 ஓட்டங்களைக் குவித்த இங்கிலாந்தின் பென் டக்கெட், ஒரு இடம் முன்னேறி தனது சிறந்த தரவரிசையான ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக 127 ஓட்டங்களைப் பெற்று பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய பகர் சமான், ஒன்பது இடங்கள் முன்னேறி 37ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இதற்கிடையில், டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
தென்னாபிரிக்காவின் கேப் டவுனில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஒன்பது விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம், தென்னாபிரிக்காவின் மார்கோ யான்சனைப் பின்னுக்குத் தள்ளி ஸ்டார்க் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.










