சீனக் கம்யூனிஸ்ட் கட்சியிடம் இருந்து அனுபவங்களைப் பெறும் ஜே.வி.பி

 

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் குழு ஒன்று, ஜேவிபி உறுப்பினர்களுடன் கட்சி அமைப்பு மற்றும் ஒழுக்கம் குறித்த தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக, விரைவில் இலங்கை வருகை தரவுள்ளது.

இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவாஷியாங்கை (Wei Huaxiang) மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பிரதான அலுவலகத்தில் சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் கட்சிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு குறித்து விரிவாகக் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 05ஆம் திகதி பெலவத்தையில் அமைந்துள்ள ஜே.வி.பி தலைமையகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, கடந்த ஒக்டோபர் 29ஆம் திகதி சீனாவில் நடைபெற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய குழுவின் ஐந்தாவது முழுமையான அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறிப்பாக, கட்சியின் முழுமையான மற்றும் கடுமையான சுய ஒழுக்கத்தைத் தொடர்ந்து பேணுதல், கட்சியைக் கட்டியெழுப்புதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் சீனத் தூதுவர் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பில் மேலதிக விளக்கங்களை வழங்குவதற்காக சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் குழுவொன்று விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும், இதன்போது ஜே.வி.பி உறுப்பினர்களுக்கு அது தொடர்பில் தெளிவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை – சீனா இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இருதரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டுள்ளனர்.

முதலீடு, தொழில்நுட்பம், போக்குவரத்து, கல்வி, மருத்துவம் மற்றும் கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் எதிர்காலத்தில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு சீனா முழுமையான ஆதரவை வழங்கும் என சீனத் தூதுவர் இதன்போது உறுதியளித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார மற்றும் தொழில்நுட்பத் துறைகளுக்கு சீனா வழங்கியுள்ள ஆதரவுக்கு நன்றி தெரிவித்த ஜே.வி.பி தரப்பு, மக்கள் விடுதலை முன்னணிக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான உறவு மற்றும் கட்சியைக் கட்டியெழுப்புவதில் சீனாவின் அனுபவங்களின் முக்கியத்துவம் குறித்தும் கருத்துகளைப் பகிர்ந்துள்ளது.

இந்தச் சந்திப்பில் சீனத் தூதரகத்தின் ஆலோசகர் மேய் ஜிங் (Mei Jing), அரசியல் பிரிவின் தலைவர் சின் லிகொங் (Qin Ligong), இரண்டாவது செயலாளர் ஜின் என்ஸே (Jin Enze) மற்றும் அதிகாரி லீ ஜியானி (Li Jiani) ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Related Articles

Latest Articles