அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவந்து தமக்கான மரணக்குழியைத் தாமே வெட்டிக்கொள்கிறது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம். ஆட்சியை இழக்கும்போது இச்சட்டங்களால் அக்கட்சியினரே அதிகம் பாதிக்கப்பட நேரிடும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
“பயங்கரவாதத் தடைச் சட்டத்தால் கடந்த காலங்களில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஜே.வி.பியே தற்போது அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவருவதாகக் கூறப்படுகிறது.
அதேபோன்று, மற்றுமொரு விடயத்தையும் குறிப்பிட விரும்புகின்றேன். தற்போது முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலங்கள் அவ்வாறே நிறைவேற்றப்படுமானால், எதிர்காலத்தில் அவற்றால் தற்போதைய ஆட்சியாளர்களே அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அதிகாரம் இருக்கும்போது மூளை இருக்காது என்று கூறுவார்கள். தற்போதைய அரசாங்கமும் அவ்வாறுதான் நடந்துகொள்கின்றது. தற்போது அவர்களிடம் ஆட்சி அதிகாரம் உள்ளது. ஆனால், ஆட்சி அதிகாரம் இல்லாத காலகட்டத்தில் இத்தகைய சட்டங்கள் தம்மை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை.
நான் 23 வருடங்களாக அரசியலில் ஈடுபட்டு வருகின்றேன். ஓர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மற்றொரு தரப்பினர் ஆட்சிக்கு வரும்போது பழிவாங்கல்கள் இடம்பெறுகின்றன. அதற்காகச் சட்டங்கள்கூட இயற்றப்படுகின்றன.
எனவே, மேற்படி சட்டமூலங்களின் ஊடாக எதிரணிக்கான மரணக்குழியை அல்ல, தமக்கான மரணக்குழியையே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெட்டிக்கொள்கின்றது. இச்சட்டங்கள் ஊடாக ஒருநாள் அவர்களுக்கே பாதிப்பு ஏற்படும்.
இதனைச் சிலர் அச்சுறுத்தலாகக் கருதலாம். நான் ஒரு சட்டத்தரணி. எனது அனுபவத்தின் அடிப்படையிலேயே இதனைக் குறிப்பிடுகின்றேன். இதனை அச்சுறுத்தலாகக் கருத வேண்டாம். சட்டங்களை முறையாக இயற்றுமாறே கோருகின்றோம்.
சட்டம் இயற்றுவது பழிவாங்குவதற்கான நடவடிக்கையாக இருக்கக்கூடாது. ஆட்சி என்பது நிரந்தரமானதல்ல” என்றார் சட்டத்தரணி மனோஜ் கமகே.
