பொலன்னறுவை வைத்தியசாலையில் பணியாற்றிய சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவர், அவர் செலுத்திச் சென்ற கார் டிப்பர் நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (06) மாலை பொலன்னறுவை – ஹபரணை பிரதான வீதியில், மினேரியா பகுதியில் 39ஆவது மைல்கல் அருகே இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மினேரியாவிலிருந்து ஹபரணை நோக்கிப் பயணித்த கார், எதிர்த்திசையில் வந்த டிப்பர் லொறியுடன் மோதியுள்ளது.
விபத்தில் இரு வாகனங்களின் சாரதிகளும் காயமடைந்து ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், காரைச் செலுத்திச் சென்ற 50 வயதுடைய சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் பொலன்னறுவை புதிய நகரப் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், லொறியின் சாரதி மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மினேரியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
