டிக் டாக் வீடியோ எடுப்பதற்காக கூண்டிலிருந்து திறந்துவிடப்பட்ட புலி தாக்கி இளைஞன் பலி

பாகிஸ்தானில் டிக் டாக் வீடியோ எடுப்பதற்காகக் கூண்டிலிருந்து திறந்துவிடப்பட்ட புலி தாக்கியதில் 19 வயதான பண்ணை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாகிஸ்தானின் லாகூர் மாகாணம் கஹ்னா கிராமத்தில் அமைந்துள்ள தனியார் விலங்கு வளர்ப்பு மற்றும் இனப்பெருக்கப் பண்ணையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அப்பகுதியைச் சேர்ந்த டிக் டாக் பிரபலமான நோமன் ஹாசன் என்பவர் சாகச வீடியோ ஒன்றை எடுப்பதற்காகக் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த புலியைத் திறந்துவிட்டுள்ளார்.

இதன்போது கட்டுப்பாட்டை இழந்த புலி, அங்கிருந்த 19 வயதான தல்ஹா என்ற பண்ணை ஊழியரைத் தாக்கிக் கடித்துக் குதறியுள்ளது. படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் பண்ணை உரிமையாளர் பயாஸ் மற்றும் டிக் டாக் பிரபலம் நோமன் ஹாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பியோடிய புலியும் பின்னர் பிடிக்கப்பட்டுள்ளது.

“டிக் டாக் வீடியோக்கள் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. பொழுதுபோக்கு அல்லது கேளிக்கை என்ற பெயரில் மனித உயிர்களைப் பணயம் வைக்க எவருக்கும் அனுமதி வழங்க முடியாது” என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles