பசறை, கோணகலை தோட்டத்தின் கஹவத்தை பிரிவில் மரக்கிளைகளை வெட்டிக்கொண்டிருந்த நபர் ஒருவர் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (17) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர், பசறை கோணகலை கஹவத்தை பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய பி. ஜீவகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரும் மற்றுமொரு நபரும் கோணகலை தோட்டத்திற்குச் சொந்தமான கஹவத்தை பிரிவிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் காணப்பட்ட எரமுது அல்லது முருக்க மரத்தின் கிளைகளை வெட்டிக்கொண்டிருந்துள்ளனர்.
இதன்போது, மரத்திலிருந்து கீழே இறங்கிய ஜீவகுமார், வெட்டப்பட்ட கிளையொன்று கீழே விழுந்த சந்தர்ப்பத்தில் அதனை வெட்ட முற்பட்டபோது தவறி கீழே விழுந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக பசறை கிராமிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், வைத்தியசாலையை அடைவதற்கு முன்னரே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பசறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.










