பட்ஜட்டுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நுவரெலியாவில் போராட்டம்

பட்ஜட்டுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நுவரெலியாவில் போராட்டம்

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல தொழிற்சங்கங்கள் இன்று (23) திங்கட்கிழமை நுவரெலியாவில் போராட்டத்தில் ஈடுபட்டன.

தேசிய எதிர்ப்பு தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட இன்றைய தினத்தில், நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மற்றும் தமது தொழில் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து போராட்டக்காரர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

…………..

நுவரெலியா வைத்தியசாலைக்கு முன்பாக தாதியர்கள் போராட்டம்!

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக தாதியர் சங்கத்தினர் இன்று (23) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுக்க பல தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ள நிலையில், அதற்கு ஆதரவாக அரச தாதியர் சங்க உறுப்பினர்கள் இன்று மதிய உணவு இடைவேளையில் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப தமக்குக் கிடைக்கும் சம்பளம் போதுமானதாக இல்லை என போராட்டத்தில் ஈடுபட்ட தாதியர்கள் தெரிவித்தனர்.

எனவே, இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சம்பள உயர்வு அல்லது வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், அனைத்து அரச ஊழியர்களுக்கும் 25,000 ரூபாய் இடைக்காலக் கொடுப்பனவை வழங்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

……….

பலாலி, காங்கேசன்துறையை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை அரசு தயக்கம்

காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா நிதி வழங்க முன்வந்த போதிலும், இலங்கை அரசாங்கம் அதில் ஆர்வம் காட்டவில்லை என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்குப் பயணம் மேற்கொண்ட அவர் நேற்று யாழ்.ஊடக மையத்தில் நடத்திய ஊடகச் சந்திப்பின் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றை அபிவிருத்தி செய்தால், அது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்ற அச்சத்தின் காரணமாகவே, சிறிலங்கா அரசாங்கம் அவற்றை அபிவிருத்தி செய்யத் தயங்குகிறது.

யாழ்ப்பாணத்தில் நிலவும் மூடுபனி மற்றும் காற்று மாசுபாடு காரணமாக, பார்வைத்திறன் குறைந்து, விமானங்கள் தரையிறங்க முடியாமல் போனதால், கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணம் – சென்னை இடையிலான விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

பலாலி விமான நிலையத்தில் ஓடுபாதை விளக்குகள் கூட பொருத்தப்படவில்லை என்பதை அறிந்து தான் அதிர்ச்சியடைந்தேன்.

இந்தச் சூழல், இந்திய வணிகர்களையும் பெரும் முதலீட்டாளர்களையும் யாழ்ப்பாணத்திற்கு நேரடியாக வருவதிலிருந்து ஊக்கமிழக்கச் செய்கிறது.

இதனால் அவர்கள் கொழும்பு வழியாகவே சிறிலங்காவுக்குள் நுழைய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர்.

காங்கேசன்துறை துறைமுகமும் யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையமும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் முக்கிய பங்காற்ற முடியும்.

இந்த இரண்டு வசதிகளையும் பொறுப்பேற்று மேம்படுத்துவதற்கு இந்தியா உதவி வழங்க முன்வந்திருந்தது.

அரசாங்கத்தின் இந்த அணுகுமுறை, தென்பகுதி நலன்களால் தூண்டப்பட்டிருக்கிறது., இதன் மூலம் வணிகத் தொடர்புகள் அனைத்தும் கொழும்பு வழியாகவே நடைபெற வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

யாழ்ப்பாணம் விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை குறித்து, இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாகவும், இது தொடர்பாக இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் முறைப்பாடு அளிக்கப் போவதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.

………….

11 மாதங்களில் வீதி விபத்துகளில் 2,463 பலி!

இலங்கையில் டிசம்பர் மாத பாடசாலை விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் போக்குவரத்துச் சட்டங்களை அமுல்படுத்தும் நடவடிக்கைகளை பொலிஸார் தீவிரப்படுத்தவுள்ளனர்.

இந்த ஆண்டின் முதல் 11 மாதங்களில் வீதி விபத்துகளில் 2,463 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பண்டிகைக் காலத்தில் விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் இந்த விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. செனதீர, பண்டிகைக் காலத்தில் போக்குவரத்துச் சட்டங்களை கடுமையாக அமுல்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் போக்குவரத்து பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

பொலிஸ் புள்ளிவிவரங்களின்படி, 2026 ஜனவரி 1ஆம் திகதி முதல் நவம்பர் 21ஆம் திகதி வரை 2,330 மரண விபத்துகள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 2,463 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதே காலப்பகுதியில் 5,868 பாரிய விபத்துகள், 9,870 சிறிய விபத்துகள் மற்றும் 4,488 சொத்து சேதங்களை ஏற்படுத்திய விபத்துகள் பதிவாகியுள்ளன.

விபத்துகளில் பாதசாரிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் அதிகளவில் உயிரிழந்துள்ள நிலையில், குறித்த காலப்பகுதியில் 813 பாதசாரிகள் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் தொடர்பான விபத்துகளில் 1,044 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 876 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும், 168 பேர் பின்னால் அமர்ந்து பயணித்தவர்களும் ஆவர்.

மேலும், வீதி விபத்துகளில் 240 பயணிகள், 190 சாரதிகள் மற்றும் 165 சைக்கிள் ஓட்டுநர்களும் உயிரிழந்துள்ளனர்.

55 முதல் 85 வயதுக்குட்பட்டவர்களே பாதசாரி விபத்துகளில் அதிகம் உயிரிழந்துள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் செனதீர சுட்டிக்காட்டியுள்ளார். இதன் மூலம் வயதான வீதிப் பயனாளர்கள் அதிக பாதிப்புக்குள்ளாகும் நிலைமை வெளிப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், மரண விபத்துகளின் எண்ணிக்கை 11ஆல் அதிகரித்துள்ள போதிலும், மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 16ஆல் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மதுபானம் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்திவிட்டு வாகனம் செலுத்துவோரைக் கண்டறியும் விசேட சோதனைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதற்காக நாடளாவிய பொலிஸ் நிலையங்களுக்கு போதிய மூச்சுப் பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், தேவைப்படும் இடங்களுக்கு போக்குவரத்து தலைமையகத்தினால் மேலதிக கருவிகளும் வழங்கப்படவுள்ளன.

அதேவேளை, தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்துடன் (NTMI) இணைந்து, சாரதிகளுக்கு வீதியோரத்தில் திடீர் போதைப்பொருள் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக நடமாடும் ஆய்வக வாகனங்களும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. வீதி விபத்துகளில் தொடர்புடைய சாரதிகளுக்கும் போதைப்பொருள் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துவதுடன், போக்குவரத்துச் சட்டங்களையும் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என பிரதி பொலிஸ் மா அதிபர் செனதீர வலியுறுத்தியுள்ளார்.

ஆண்டு இறுதிப் பயணக் காலத்தில் வீதி விபத்துகளைத் தடுத்து, உயிரிழப்புகளைக் குறைக்கும் நோக்கில் அனைத்து போக்குவரத்துப் பொலிஸ் பிரிவுகளும் உஷார் நிலையில் செயற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

…………

ரயில் பாதையில் நடந்த சோகம் – இரு மீனவர்கள் பலி, ஒருவர் படுகாயம்!

திருகோணமலை, சீனக்குடா பகுதியில் ரயில் மோதிய விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொட்பே மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகிலுள்ள ரயில் பாதையில் நேற்று (22) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த ரயில், ரயில் பாதையில் இருந்த மூவரை மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், படுகாயமடைந்த ஏனைய இருவரும் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர்கள் மாத்தறை மற்றும் தேவேந்திரமுனை பகுதிகளைச் சேர்ந்த 48 மற்றும் 58 வயதுடைய மீனவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களின் சடலங்கள் திருகோணமலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

சீனக்குடா பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

……….

கொழும்பு – கண்டி வீதியின் கடுகண்ணாவ பகுதி இன்று மூடப்படுகிறது

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதியில் இன்று (23) இரவு 11 மணி முதல் நாளை (24) அதிகாலை 6 மணி வரை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

கீழ் கடுகன்னாவ பகுதியில் வீதியின் மீது விழும் அபாயம் உள்ள பாறைகளை அகற்றுதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பராமரிப்புப் பணிகளை முன்னெடுப்பதற்காக 7 மணித்தியாலங்கள் குறித்த வீதி மூடப்படவுள்ளது.

இந்த வீதி மூடல் தொடர்பாக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.

அத்துடன், வீதி மூடலுக்கு முன்னதாக தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர செயற்பாட்டு மையமும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

…………..

இலங்கைக்கு தேச நலன்களை மையமாகக் கொண்ட முனைப்பான வெளிநாட்டுக் கொள்கை அவசியம் – சஜித்

இலங்கையின் தேச நலன்களைப் பாதுகாக்கும் வகையிலும், தேசிய தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலும், முனைப்பான வெளிநாட்டுக் கொள்கையொன்றை அரசாங்கம் பின்பற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார இராஜதந்திரத்தை வலுப்படுத்தி, நாட்டின் மூலோபாய புவியியல் அமைவிடத்தைத் திறம்படப் பயன்படுத்தும் ஒருங்கிணைந்த வெளிநாட்டுக் கொள்கை அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் குழுநிலை விவாதத்தில் இன்று (23) கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வெளிநாட்டுக் கொள்கையின் வெற்றியை மதிப்பிடுவதற்கான 12 முக்கிய தூண்களைத் தனது உரையில் முன்வைத்த சஜித் பிரேமதாச, தேசிய பாதுகாப்பு, பொருளாதார அபிவிருத்தி, சர்வதேச ஒத்துழைப்பு, மனித உரிமைகள், சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் நலன் பேணுதல் ஆகியவை அவற்றில் உள்ளடங்குவதாகக் குறிப்பிட்டார்.

இலங்கையின் சர்வதேச நிலைப்பாட்டையும் மூலோபாய அனுகூலங்களையும் அரசாங்கம் போதுமான அளவில் பயன்படுத்தியுள்ளதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

குறிப்பாக, வர்த்தகத்தை ஊக்குவித்தல், கடல்சார் வளங்களை அபிவிருத்தி செய்தல் மற்றும் சார்க் (SAARC), பிம்ஸ்டெக் (BIMSTEC), இந்து சமுத்திர வலய ஒத்துழைப்புச் சங்கம் (Indian Ocean Rim Association) ஆகிய அமைப்புகள் ஊடாக பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் அதிக நன்மைகளைப் பெற்றுள்ளதா என்பது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.

பலஸ்தீன மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும், அமைதியான இரு நாட்டுத் தீர்வுக்கு ஆதரவளிப்பதன் அவசியத்தையும் வலியுறுத்திய எதிர்க்கட்சித் தலைவர், காலநிலை மாற்றம் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி தொடர்பிலும் அர்த்தமுள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.

செயலற்ற அணிசேரா அணுகுமுறையை நிராகரித்து, உலக நாடுகளுடன் சாதகமான பங்காண்மைகளை உருவாக்கி, அவற்றின் ஊடாக இலங்கைக்கு நேரடிப் பயன்களைப் பெற்றுக்கொண்டு பொருளாதார மீட்சிக்கு பங்களிப்புச் செய்வதே ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கை நிலைப்பாடு எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டுக் கொள்கை தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் செயல்முறையை நவீனமயப்படுத்துவதற்கு, புதிய நிறுவன கட்டமைப்புகள் மற்றும் ஆய்வு நிறுவனங்கள் (Think Tanks) மூலம் சரியான கொள்கை வகுப்பு மற்றும் பயனுள்ள நடைமுறைப்படுத்தலை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் முன்மொழிந்தார்.

அரசியல் வேறுபாடுகளைக் கருத்தில் கொள்ளாமல், இலங்கைக்கும் அதன் 22 மில்லியன் மக்களுக்கும் நன்மை பயக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் எதிர்க்கட்சி ஆக்கபூர்வமான ஆதரவை வழங்கும் எனவும் சஜித் பிரேமதாச உறுதியளித்தார்.

மேலும், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற நடவடிக்கைகள், பரந்த அளவிலான தரப்பினருடன் கலந்தாலோசித்த பின்னரே முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற ஜனாதிபதியின் அழைப்பை மதிப்பதை உறுதிப்படுத்துமாறு பிரதிச் சபாநாயகரிடமும் அவர் கேட்டுக்கொண்டார்.

……….

கிளிநொச்சி குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு: விசாரணைக்கு உத்தரவு

கிளிநொச்சி குளத்தில் பெருமளவிலான மீன்கள் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட அமைச்சர், மீன்கள் உயிரிழந்தமைக்கான காரணங்கள் குறித்து நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி, சம்பவத்தின் உண்மை நிலவரம் தொடர்பான தெளிவான விளக்கத்தைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

கிளிநொச்சி குளத்தின் கீழ்ப்பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், பெரிய அளவிலான மீன்கள், நன்னீர் இறால்கள் மற்றும் மீன் குஞ்சுகள் உள்ளிட்ட பெருமளவிலான நீர்வாழ் உயிரினங்கள் உயிரிழந்து நீரில் மிதந்துள்ளன.

குளத்தின் நீர் வெளியேற்றப்பட்ட விதம் மற்றும் நீர்ப்பாசன நடவடிக்கைகளின்போது ஏற்பட்டிருக்கக்கூடிய பிரச்சினைகள் தொடர்பாகப் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இவ்விடயம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, இச்சம்பவத்தினால் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டுள்ள மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக மேற்கொண்ட உழைப்பின் பலனாக வளர்க்கப்பட்ட மீன்களையும், வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களையும் இழந்துள்ள மீனவர்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகள் குறித்தும் அமைச்சர் கவனம் செலுத்தியுள்ளார்.

இதற்கமைய, பாதிக்கப்பட்ட மீனவர்களின் இழப்புகள், வாழ்வாதாரப் பாதிப்புகள் மற்றும் சம்பவத்திற்கான காரணங்கள் தொடர்பில் உரிய அதிகாரிகள் மூலம் விரிவான தகவல்களைப் பெற்று அறிக்கை சமர்ப்பிக்குமாறும் வட மாகாண ஆளுநரிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், மீன்கள் பெருமளவில் உயிரிழந்துள்ளதால் குளத்து நீரின் தரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு, இச்சம்பவத்திற்கான உண்மையான காரணங்களைக் கண்டறிந்து, பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

 

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles