‘வாய்ப்புகளை பயன்படுத்தி மீண்டெழுவோம்’ – ஜீவன் அழைப்பு

நீயா, நானா என்ற அரசியலாலேயே எமது சமூகம் பின்தங்கியிருக்கின்றது. எனவே, குறுகிய அரசியல் நோக்கில் விமர்சனங்களை முன்வைக்காமல் ஆரோக்கியமான விமர்சனங்களை முன்வைக்குமாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பத்தனை கிறேக்கிலி தோட்டத்தில் 20.07.2020 அன்று பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது,

” கொவிட் – 18 பிரச்சினையால் இன்று அனைத்து நாடுகளினதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலைமை கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் பொருளாதாரம் மீண்டெழும். எமது நாட்டிலும் வைரஸை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இவ்வாறு பொருளாதாரம் மீண்டெழும்போது அதன் பங்காளிகளாக நாம் மாறவேண்டும். கிடைக்கும் வாய்ப்புகளை உரியவகையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அதற்கு நாம் தயாராகவேண்டும். ஒரு காலகட்டத்தில் எமது மலையக பெருந்தோட்டத்தொழிலாளர்கள் தான் இலங்கையின் பொருளாதாரத்துக்கு பெருமளவு பங்களிப்பை வழங்கினர்..

எனவே, தற்போது ஆயிரம் ரூபா தொடர்பில் மட்டும் பேசிக்கொண்டிருக்காது, சுற்றுலா அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்தி அத்துறையில் எவ்வாறு பயன்பெறலாம், எமது இளைஞர்களுக்கு எவ்வாறு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கலாம் என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படவேண்டும்.

நாட்டில் எதிர்காலத்தில் மரக்கறி வகைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும். நுவரெலியா மாவட்டத்தில்தான் அதிகளவு மரக்கறி உற்பத்தி இடம்பெறுகின்றது. அப்போதும் எமக்கு வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி, பொருளாதார ரீதியில் எம்மை பலப்படுத்திக்கொள்ளவேண்டும்.

இதற்கான களத்தை நாம் அமைத்துக்கொடுப்போம். மலையக பல்கலைக்கழகம் அமையும்போது, ஹோட்டல் முகாமைத்துவம் தொடர்பான கற்கை நெறியையும் கோரியுள்ளோம். பல்கலைக்கழகத்துடன் இணைந்ததாக விவசாய கல்லூரியும் வரவேண்டும். இவ்வாறு தெளிவான திட்டங்களுடனும், மலையக தொடர்பான கனவுகளுடனுமே எமது பயணம் தொடர்கின்றது.

எம்மை விமர்சிப்பவர்கள் திட்டங்களை முன்வைப்பவில்லை. விமர்சனங்களை மட்டுமே முன்வைக்கின்றனர். ஆரோக்கியமான விமர்சனங்களாக இருந்தால் ஏற்கலாம், ஆனால் இங்கு அர்த்தமற்ற விதத்திலேயே விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. நீயா, நானா என்ற அரசியலாலேயே நாம் பின்தங்கிய நிலையில் இருக்கின்றோம். இந்த அரசியல் கலாச்சாரம் மாறவேண்டும்.

எதற்கும் அஞ்சவேண்டாம், இருட்டபாத்து பயப்படாதீங்க, நிச்சயம் சேவல் கூவும், சூரியன் உதிக்கும்.” – என்றார்.

Related Articles

Latest Articles