மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா கோரிவரும் நிலையில்,அதனை பெற்றுக்கொடுப்பதற்கு தலைமைத்துவத்தை வழங்கவேண்டிய தொழிற்சங்கங்களோ, அடிப்படை அல்ல, எப்படியாவது ஆயிரம் ரூபா கிடைத்தால் போதும் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளனர்.
அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தோட்டக்கம்பனிகள், அனைத்து கொடுப்பனவுகளையும் உள்ளடக்கிய வகையிலான ‘சூழ்ச்சிகரமான’ சம்பள உயர்வு திட்டத்தை முன்வைத்து அதற்கான சந்தைப்படுத்தலில் தற்போது தீவிரமாக இறங்கியுள்ளனர்.
நாளொன்றுக்கு ஆயிரத்து 25 ரூபாவை சம்பளமாக பெறலாம் எனக்கூறினாலும் அது அனைத்து தொழிலாளர்களுக்கும் சாத்தியப்படுமா என்பது கேள்விக்குறியே. அதுமட்டுமல்ல கூட்டு ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் 2 வருடங்களாக இருக்கும் நிலையில் அதனை நான்கு ஆண்டுகளாக அதிகரிப்பதற்கான திட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் 4 ஆண்டுகளுக்கு ஒருதடவையே தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் சூழ்நிலை உருவாகும்.
கம்பனிகள் இவ்வாறு திட்டத்தை முன்வைத்திருந்தாலும், தமது தரப்பு முன்மொழிவு என்னவென்பதனை தொழிற்சங்கங்கள் உரிய வகையில் முன்வைக்கவில்லை. ஆயிரம் ரூபா தா என கத்தி பேசினாலும், அதனை எவ்வாறு வழங்கலாம் என்பதற்கான திட்டத்தை முன்வைக்கவில்லை. கூட்டு ஒப்பந்தத்துக்கு வெளியில் இருந்து கோஷம் எழுப்பும் தொழிற்சங்கங்களும் சம்பள உயர்வுக்கான மாற்று திட்டத்தை முன்வைக்கவில்லை. மாறாக கூட்டத்தோடு கோவிந்தா என்ற தொனியில் ஆயிரம் ரூபா என்ற சத்தம் மட்டுமே வருகின்றது. தொழிற்சங்கங்களின் இந்த நகர்வு கம்பனிகளுக்கே பக்க பலமாக அமைந்துள்ளது.
மறுபுறத்தில் சம்பள நிர்ணய சபை ஊடாக சம்பளம் நிர்ணயிக்கப்படும் என அரசு கூறினாலும், அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா கிடைக்கப்போவதில்லை. ‘ஆயிரம் ரூபாவரையான சம்பள உயர்வுக்கான சாத்தியப்பாடுகள்’ குறித்தே இச்சபை ஆராய்ந்து முடிவெடுக்கும்.
ஆனால் அமைச்சரவை முடிவை வைத்துக்கொண்டு ஆயிரம் ரூபா கிடைத்துவிடும், வெற்றிபெற்றுவிட்டோம், கூட்டு ஒப்பந்தத்தில் இருந்தகூட வெளியேறுவதற்கு தயார் என்றெல்லாம் தற்போது ஆயிரம் ரூபா விடயத்தில் ஆயிரம் அரசியல் கூத்துகளும் அரங்கேற்றப்பட்டுவருகின்றன.